வீடு கட்டும் திட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டிய போது இலங்கை தமிழர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் அடிஅண்ணாமலை, அத்தியந்தலில் இலங்கை தமிழர்கள் முகாம்கள் உள்ளன. இவர்களுக்கு திருவண்ணாமலை செங்கம் ரோடு காஞ்சி மடம் பக்கத்தில் புதியதாக வீடுகள் ரூ.11 கோடியே 2 லட்சத்து 13 ஆயிரம் செலவில் கட்டித் தரவும், ரூ.2 கோடியே 55 லட்சம் செலவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து தரவும் திட்டமிடப்பட்டது.
ஒரு அடுக்கில் தரை தளத்தில் 4 வீடுகள், முதல் தளத்தில் 4 வீடுகள் என மொத்தம் 136 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு அத்தியந்தல் இலங்கை தமிழர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. தங்களுக்கு தனித்தனி வீடுகள்தான் வேண்டும் என முதலில் கலெக்டரிடமும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜைக்கு வந்த அமைச்சர் எ.வ.வேலுவிடம் முறையிட்டனர். இதனால் பூமி பூஜையை அமைச்சர் ரத்து செய்து விட்டு சென்றார்.
இந்நிலையில் அடிஅண்ணாமலை இலங்கை தமிழர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல ஒப்புக் கொண்டனர். இதையடுத்து தள்ளி வைக்கப்பட்ட பூமி பூஜை இன்று காலை நடந்தது. முன்னதாக அந்த இடத்தில் அத்தியந்தல் இலங்கை தமிழர்கள் தனிவீடு கேட்டு அமைச்சர் வரும் பாதையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகளும், திமுகவினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். அமைச்சர் வந்த பிறகு அவரிடம் பேசுங்கள் என அவர்களை எழுந்திருக்க செய்தனர்.
அதன்பிறகு அங்கு வந்த அமைச்சர் எ.வ.வேலு, அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தியந்தல் இலங்கை தமிழர்கள் அமைச்சர் கார் வரும் பாதையில் மீண்டும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அத்தியந்தல் பகுதியில் வசிக்கின்ற 76 இலங்கை தமிழர்களுக்கு கனந்தம்பூண்டியில் தனித்தனி வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் அறிவித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அடிக்கல் நாட்டு விழாவில் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராமபிரதீபன், கோட்டாட்சியர் (பொறுப்பு) செந்தில்குமார் மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், ஆணையாளர் எம்.காந்திராஜ், தாசில்தார் கே.துரைராஜ் ஒன்றிய ஆணையாளர்கள் பரமேஸ்வரன், பிரித்திவிராஜன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.