பக்தர்களுக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியே மேற்கூரை அமைத்து இருக்கை வசதி ஏற்படுத்தி தர அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள், மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று (13.02.2025) தனது முகாம் அலுவலகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறப்பான வகையில் தரிசனம் மேற்கொள்ளும் பொருட்டு துறை சார்ந்த அலுவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் க.தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்.பி எம்.சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலையார் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் சிறப்பான வகையில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக, வடஒத்தவாடை தெருவில் மேற்கூரை அமைத்து, பக்தர்களுக்கு இருக்கை வசதிகளுடன் கூடிய குடிநீர் வசதிகளை ஏற்படுத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தரிசனம் முடித்து வெளியே வரும் பக்கதர்களை பேகோபுரம் வழியாக விரைவாக வெளியில் வருவதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக திருவண்ணாமலை மாநகர உட்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டபொம்மன் தெரு மற்றும் இராமலிங்கனார் தெருவில் உள்ள மின்கம்பங்களை அகற்றி புதைவட கம்பிகளாக மாற்றிட வேண்டும் எனவும், கல்நகர் தெரு, கோபால் நாயக்கன் தெரு மற்றும் ஆடுத்தொட்டி தெருவில் உள்ள சாலைகளை விரிவுப்படுத்தப்படுவதால் அச்சாலைகளில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை சாலை ஒரமாக மாற்றி அமைக்க வேண்டுமெனவும் மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கலெக்டரும், எஸ்.பியும் இணைந்து மேற்கண்ட நடிவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, கோயில் இணை ஆணையர் ஜோதி, கோட்டாட்சியர் (பொ) திரு. செந்தில் குமார், மாநகராட்சி ஆணையர் திரு.காந்திராஜ், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.