திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவாச்சாரியார்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தை மாத பவுர்ணமி நேற்று இரவு 7.59 மணிக்கு தொடங்கி இன்று இரவு 8.16 மணிக்கு முடிவடைந்தது. நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முண்டியத்து வரிசையில் செல்வதில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் பி.டி.ரமேஷ், ஆந்திராவைச் சேர்ந்த விஐபி குடும்பத்தினரை கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதை கோயிலின் இணை ஆணையர் ஜோதி கண்டித்தார். அவர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் சிலர் பூஜை பணிகளை புறக்கணித்து விட்டு இன்று காலை கோயிலுக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
சமரச பேச்சு வார்த்தை
தகவல் கிடைத்ததும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் கோமதி குணசேகரன், பெருமாள் ஆகியோர் சிவாச்சாரியார்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
தலைமை குருக்களுக்கு இந்த நிலை என்றால் சாதாரண குருக்களுக்கு என்ன நிலைமை ஏற்படும்? எங்களுடைய ஜீவனாம்சமே தட்டுக்காசை நம்பித்தான் இருக்கிறது. எங்களுக்கு சம்பளம் இல்லை. குருக்கள் யாரையும் அழைத்துச் செல்லக்கூடாது, என்னை கேட்டுத்தான் அழைத்துச் செல்ல வேண்டும் என ஜே.சி (இணை ஆணையாளர்) சொல்கிறார். அவரது நிர்வாகத்தில் நாங்கள் தலையிடவில்லை. இவ்வளவு கூட்டம் வருவதற்கு காரணமே நாங்கள் பூஜை செய்த பலன்தான் என சிவாச்சாரியார்கள் தரப்பில் ஆவேசமாக தெரிவிக்கப்பட்டது.
பிறகு சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சிவாச்சாரியார்கள் பணிக்கு திரும்பினர்.
இடை நிறுத்த தரிசனம் எங்கே?
திருப்பதி போன்று திருவண்ணாமலையிலும் பிரேக் தரிசன முறையை கொண்டு வர வேண்டும் என்றும், இதனால் தரிசன நேரம் ஒதுக்கப்படுவதோடு, கோயிலுக்கும் நன்கொடை கிடைக்கும் என்பது ஆன்மீகவாதிகளின் கருத்தாக உள்ளது. இதை சென்ற வருடம் திருவண்ணாமலைக்கு வந்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பிரேக் தரிசன முறை அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்காக தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை 300 ரூபாய் கட்டணத்தில் இடை நிறுத்த தரிசனம் (பிரேக் தர்ஷன்) அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், 300 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு தேங்காய், பழம், விபூதி குங்கும பிரசாதம், வில்வம் மற்றும் சுவாமி அம்பாள் படம் ஆகியவை ஒரு மஞ்சள் பையில் வைத்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றது.
ஆனால் இத்திட்டம் அறிவிப்போடு நின்று விட்டது. சிலருடைய பிரஷர் காரணமாகவே இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாடு மற்றும் பிற மாநில பக்தர்கள், வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் குறிப்பாக பிறந்த நாள், திருமண நாட்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஆன்லைனில் டிக்கெட் பெற்று பயனடைவதோடு, கோயில் நிர்வாகத்திற்கும் வருவாயை ஏற்படுத்தி தரும் என்பது திண்ணம்.
சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம் என அப்போதைய கலெக்டர் முருகேஷ் சொல்லியிருந்தார். வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் உட்கார வைக்கப்பட்டு தனி வழியில் தரிசனத்திற்கு அனுப்பப்படுவார்கள் என கலெக்டராக இருந்த பாஸ்கர பாண்டியன் சொல்லியிருந்தார். ஆனால் இது எல்லாமே அந்த நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு சரி. எதுவுமே முறைப்படுத்தப்படவில்லை. விரைவு தரிசனம் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது.
சிவாச்சாரியார்கள் போராட்டம் – வீடியோ