Homeசெய்திகள்தேரடி வீதி சிமெண்ட் சாலை-ஒப்பந்ததாரர் மாற்றம் ஏன்?

தேரடி வீதி சிமெண்ட் சாலை-ஒப்பந்ததாரர் மாற்றம் ஏன்?

திருவண்ணாமலை தேரடித் தெரு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பேகோபுரத் தெரு சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரருக்கு பதில் புதிய ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தேரடித் தெருவிலிருந்து திருவூடல் தெரு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் 2021-22 ஆம் ஆண்டு முதற்கட்டமாக தேரோடும் வீதியினை இரண்டாக பிரிக்கப்பட்டு, முதற்கட்டமாக பேகோபுரம் பகுதியில் ரூ. 17 கோடி மதிப்பீட்டில் 1கிலோ மீட்டர் தொலைவிற்கு கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக ரூ. 15 கோடி மதிப்பீட்டில் தேரடி வீதி, திருவூடல் தெரு ஆகிய பகுதிகளில் 1.7 கிலோ மீட்டர் தொலைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

தேரடிவீதி சிமெண்ட் சாலை-ஒப்பந்ததாரர் மாற்றம் ஏன்?

சாலையின் அகலம் என்பது 7மீட்டர் முதல் 12 மீட்டர் வரை கொண்டது. எனவே தேரடி வீதி மற்றும் திருவூடல் தெரு பகுதியில் உள்ள சாலையினை கான்கீரிட் சாலை நெடுஞ்சாலை துறையின் சார்பாக நவீன இயந்திரத்தின் மூலம் தரமாக அமைக்கப்பட உள்ளது.

பாதாள சாக்கடையின் குழிகளை மேலே உயர்த்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தி சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது. மின்சாரத்துறை சார்பாக, ஏறத்தாழ இப்பகுதியில் 97 மின்கம்பங்கள் உள்ளது. மின்கம்பங்களை அகற்றி, புதைவட கம்பிகளை இணைக்கும் பணிகளும் உள்ளன. மேலும் போக்குவரத்திற்காக காவல்துறையின் பங்களிப்புகளும் உள்ளது.

பல சமூக வலைத்தளங்களுக்கு பாராட்டுகிற மனமே இல்லை. திருவண்ணாமலை இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நிலைகளில் உயர்ந்திருக்கிறது என்பதை என்றைக்காவது சமூக வலைத்தளங்கள் பாராட்டுகிறதா? ஏதாவது குறையை கண்டுபிடித்து அதை போட்டுக் கொண்டே இருப்பதுதான் வேலை. அதை குறையாக எடுத்துக் கொள்ளாமல் சுட்டி காட்டுகிறார்கள் என நினைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

திருவூடல் தெரு 7 மீட்டர் சாலையாக உள்ளது. வியாபார நிறுவனங்களுக்கு வருபவர்கள் வண்டிகளை நிறுத்துவதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைத் துறையினர் கால்வாய் உயரத்தை அதிகப்படுத்தாமல் இருக்க டிசைனை மாற்றி சாலை பணியை செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேரடிவீதி சிமெண்ட் சாலை-ஒப்பந்ததாரர் மாற்றம் ஏன்?

விழாவில் கலெக்டர் தர்ப்பகராஜ், அண்ணாதுரை எம்.பி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர், கே.ஜி.சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளர் ஞானவேலு, உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2022-ஆம் ஆண்டு மே மாதம் பேகோபுரத்தெரு-பெரியத்தெரு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கி அந்த வருட தீபத்திருவிழாவிற்கு முன் முடிவடைந்தது.

இந்த பணி துவக்க விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, இந்த ஊரில் பல பேர் ஒப்பந்ததாரராக இருந்தாலும் அவர்களுக்கு சாலை போடுவது பாலம் கட்டுவது போன்றவற்றில் அனுபவம் உள்ளது. ஆனால் கான்கிரீட் சாலை என்பது விமான ஓடுதளம் போன்றது. திருவண்ணாமலை மாடவீதி என்பது தேர் ஓடுகிற பாதை. எனவே அந்த பாதை சிறப்பாக அமைய வேண்டும்.இல்லையென்றால் பல்வேறு கேள்விகளுக்கு ஆளாக நேரிடும். எனவே ஏற்கனவே தரமான பாதை எங்கு போட்டிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தோம். கொங்கு மண்டலத்தில் உள்ள சிவா இன்ஜினியரிங் கம்பெனியினர் சென்னை பார்த்தசாரதி கோயில் அருகில் தேரோடும் வீதியை அமைத்துள்ளார்கள். அந்த பாதையை நான் சென்று நேரில் பார்த்தேன். எனவே முறையாக டெண்டர் விடப்பட்டு சிவா இன்ஜினியரிங் கம்பெனிக்கு இந்த கான்கிரீட் சாலை போடும் பணி வழங்கப்பட்டுள்ளது என்று பேசியிருந்தார்.

கார்த்திகை தீபம் வருவதற்கு சில மாதங்களே இருந்ததால் வடமாநிலத்தில் இருந்து மிஷின் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பயன்பாட்டிற்கு விடப்பட்ட சில மாதங்களிலேயே ஆங்காங்கே பெயர்ந்து போய் சேதமாகி விட்டது. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியை அடிக்கடி மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இந்த சாலை சேதமடைந்திருப்பது பற்றிய விமர்சனம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதுதான் விமான ஓடுதளம் மாதிரியான கான்கிரீட் சாலையா? என மக்களும் பேச ஆரம்பித்தனர். பாஜகவும் விமர்சனம் செய்திருந்தது.

இந்நிலையில்  தேரடித் தெரு-திருவூடல் தெரு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சிவா இன்ஜினியரிங் கம்பெனிக்கு தராமல் மதுரையைச் சேர்ந்த நாட்ச் இந்தியா ப்ராஜெக்ட் என்ற நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!