ரத சப்தமியை யொட்டி திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் செய்யாற்றில் கோமியம், பசுசாணம் கலக்கப்பட்ட நீரால் விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடினார்.
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கத்தில் 137 ஆம் ஆண்டு ஆற்று திருவிழா நடைபெற்றது. செய்யாற்றில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பந்தலில் அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், திருபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். காலை 11 மணி அளவில் தீர்த்தவாரி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் ஆற்றில் வெள்ளம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த வருடம் தண்ணீர் நிறைவாக இருந்ததை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து புனித நீராடினர்.
இந்த வருடம் கலசப்பாக்கம் ஆற்று திருவிழாவில் காஞ்சி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார். கும்பமேளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரில் எருக்கம் இலை, கோமியம், பசுசாணம், அட்சதை, அருகம்புல் ஆகியவற்றை கலந்து நீராடினார்.
பிறகு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
குருசேத்ராவில் உள்ள பிரம்மசரோவர் குளத்தில் சூரிய கிரகணத்தில் ஸ்தானம் செய்வது மிகவும் விஷேசமான ஒன்று. யாத்திரை சென்ற போது பிரம்மசரோவர் குளம் புதுப்பிக்கப்பட்டவுடன் முதலில் ஸ்தானம் செய்தது ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள்தான்.
ஆயிரம் சூரிய கிரகணத்தின் போது ஸ்தானம் பண்ணும் புண்ணியம் இந்த ரதசப்தமியில் ஸ்தானம் பண்ணினால் கிடைக்கும். முருகர், அம்பாள், சூரிய பகவான் என மூன்றும் சேர்ந்து வரக்கூடிய இந்த நன்னாளில் ரதசப்தமியில் நீராடுவது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
செய்யாறு திருமுக்கூடல் என்ற ஊரில் பாலாறு, செய்யாறு, காஞ்சிபுரத்திலிருந்து வரக்கூடிய வேகவதி ஆறு என மூன்றும் கலக்குமிடம் மிகவும் விசேஷம் வாய்ந்தது. இந்த ரதசப்தமி ஆற்று திருவிழாவை மாணவர்களையும் இணைத்து கலாச்சார திருவிழாவாக வெகு விமர்சியாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.