திருவண்ணாமலையில் உள்ள பிரபல மருத்துவமனை ரூ.5 லட்சம் வரி பாக்கி வைத்ததால் ஜப்தி பேனரை அந்த மருத்துவமனையில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக கட்டி விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக நகரமான திருவண்ணாமலை 1896 ஆம் ஆண்டு நகராட்சியானது. 1959-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1974-ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1998-ஆம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2008-ஆம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
மொத்தம் 13.64 சதுர கிலோ மீட்டர் கொண்ட திருவண்ணாமலையோடு தற்போது 18 ஊராட்சிகள் சேர்க்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு கணக்கின்படி திருவண்ணாமலை நகரில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 278 மக்கள் தொகை இருப்பதாக கணக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் இருக்கின்றன. இவைகள் தற்போது பல மடங்கு உயர்ந்திருக்கும்.
2023-24 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.30 கோடியே 15 லட்சத்து 29 ஆயிரம் வருமானம் வந்துள்ளது. ஆனால் ரூ.36 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரம் செலவாகி உள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் வரி பாக்கிகளை வசூல் செய்ய மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மத்திய பஸ் நிலையத்தில் வரி பாக்கி வைத்துள்ள வியாபாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு மாநகராட்சி வைத்த பேனர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்த அதிரடியாக சொத்து வரி கட்டாத நிறுவனங்களின் முன் ஜப்தி அறிவிப்பு பேனரை ஒட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள நேத்ரா மருத்துவமனை ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக சொத்து வரி பாக்கியை நிலுவையாக வைத்துள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாக்கி வசூல் ஆகாததால் மாநகராட்சி ஆணையர் சார்பில் நகராட்சி அலுவலர்கள் இன்று காலை அந்த மருத்துவமனை கேட்டில் ஜப்தி அறிவிப்பு பேனரை கட்டி விட்டு சென்றனர். அதில் 2017 முதல் 2025 வரை சொத்து வரி பாக்கி 5 லட்சத்து 34 ஆயிரத்து 162 ரூபாய் நிலுவையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகையை கட்ட தவறினால் இந்த சொத்து சுவாதீனம் எடுக்கப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த பேனரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலர்களின் இந்த அதிரடி நடவடிக்கை நகரில் பரபரப்பையும், நிறுவன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.