மத்திய அரசோடு சண்டை போடவா மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்? என சசிகலா திமுகவிற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்த வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும். இதில் சந்தேகமே இல்லை. இந்தியாவில் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. 1971 இல் தொகுதி வரன்முறை என்பது அரசியலமைப்பில் இருக்கிறது. 71 லிருந்து நமக்கு 39 தொகுதிகள்தான் இருக்கிறது. 76-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையார் ஒவ்வொரு 10 வருடத்துக்கு ஒரு முறையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். 76 -ல் இந்திரா காந்தி அம்மையார் ஆட்சி காலத்தில் குடும்ப கட்டுப்பாடு மிகவும் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும், இரண்டு குழந்தைகள் போதும் என்பதை பெரிய அளவில் விளம்பரங்கள் கொடுத்து மக்களுக்கு புரிய வைத்தனர். குறிப்பாக தமிழ்நாடு. கேரளா, ஒன்றிணைந்த ஆந்திரா இங்கெல்லாம் இது தீவிரப்படுத்தப்பட்டது.
வடக்கு பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து தெற்கு பகுதியில் மக்கள் தொகை குறைந்து விட்டது. இருக்கிற தொகுதியை குறைப்பது நல்லதல்ல என்று சொல்லி இன்னும் இருபது வருடத்திற்கு இதுவே நீடிக்கும் என இந்திரா காந்தி அம்மையார் சொல்லிவிட்டார். 2022-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்திலும் தொகுதி சீரமைப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதனால் இப்போது உள்ள பிரதமரும் அதையேத்தான் செய்வார் என நான் நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசு எப்படி நடக்கிறது ஊரறிந்த விஷயம். எல்லோருக்கும் தெரியும். மாநகர், டவுன், வில்லேஜ் வரைக்கும் இந்த ஆட்சியை பற்றி தெரிந்திருக்கிறது. இந்த திமுக அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்பது எதார்த்த உண்மை. யாரும் மறுக்க முடியாது திமுக காரர்கள் தான் மறுக்க முடியும். பொதுமக்கள் திமுக காரர்கள் நன்றாக ஆட்சி செய்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இப்போது 44 வது மாதத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மொத்தம் 60 மாதம். எதற்கும் பணம் இல்லை. எதுவும் செய்ய முடியாது. மீதி காலத்தை ஓட்டியாக வேண்டும். இதனால் கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி சீரமைப்பை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை பிரச்சார யுக்தியாக திமுக செய்கிறது.
மின்சாரத்தை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? கருணாநிதி இருக்கும் போது மின்சார துறை அமைச்சராக ஆற்காடு வீராசாமி இருந்தார். அப்போது என்ன நடந்ததோ அதுதான் இப்போது நடக்கிறது. அம்மா இருக்கும்போது மின்சாரத்தை வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்தோம். ஏன் உங்களால் செய்ய முடியவில்லை? அரசு மருத்துவமனையில் டாக்டர்களை மட்டும் நியமித்தால் போதாது. செவிலியர்களையும் நியமிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சத்து மாவு ஒழுங்காக வருகிறதா? என செவிலியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பார்கள். அது இப்போது நடைபெறுவதில்லை. கருவுற்ற பெண்களுக்கு சத்து உருண்டை கொடுப்போம். தடுப்பூசி போட வேண்டும். அம்மா அறிவித்த 18000 பணம் கொடுக்க வேண்டும். இது எல்லாம் எதுவுமே தமிழ்நாட்டில் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களில் ஜனத்தொகை அதிகமாகி விட்டது. அதனால் எல்லோரும் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என பொறுப்பற்ற தனமாக முதல்வர் பேசலாமா?
மத்திய அரசை எதிர்க்க வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி சொல்லுகிறார். மத்திய அரசுடன் சண்டை போடுகிற நோக்கிலேயே இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏழைப் பெண் தனியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு சென்றால் ஒன்றரை லட்சம் ரூபாய் இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்க முடியாது.
இதற்கு தான் மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு டாக்டர்களை நியமித்திருக்கிறோம். இப்போது அதெல்லாம் செய்யவேயில்லை. இதையெல்லாம் செய்வதை விட்டு விட்டு மத்திய அரசோடு சண்டை போடவா உங்களிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.