எதிர்கட்சியாக கூட இல்லாமல் ஆக்கி விடுவோம் என திமுகவிற்கு வருவாய் அலுவலர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் நில அளவை ஒன்றிப்பு கட்டிடத்தில் திருவண்ணாமலை மைய தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட தலைவர் பூ.ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சு.பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் புதிய மாவட்ட தலைவர் ரகுபதி உள்பட புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநில துணை தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாநில துணை செயலாளர் டி.டி.ஜோஷி ஆகியோர் சான்றுகள் வழங்கி பேசினார்கள்.
அன்பழகன் பேசியதாவது,
நமது சங்கத்தின் மாநில மாநாடு 37 மாவட்டங்களில் நடைபெற்றது. ஆனால் திருவண்ணாமலையில் நடைபெறவில்லை. முன்பு போல் கம்பீரமாக முதல் மாவட்டமாக திருவண்ணாமலை வரவேண்டும். நிர்வாகிகள் மாதந்தோறும் கூடி விவாதிக்க வேண்டும். திருவண்ணாமலை கலெக்டர் நடந்து கொள்ளும் விதம் குறித்து இங்கு பேசினார்கள். நாம் ஓரணியில் நின்று திருவண்ணாமலை கலெக்டருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
பணி நெருக்கடி, பணி சுமையால் அவதிப்பட்டு வருகிறோம். புதிய பென்ஷன் திட்டத்தால் நமக்கு பென்ஷன் கிடைக்காத நிலை உள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், எம்எல்ஏக்களுக்கு தனி பென்ஷன் உள்ள நிலையில் நமக்கு தரக்கூடாது என்கின்றனர். 25 ஆயிரம் ரூபாய் வாங்கிய எம்எல்ஏ இன்று ஒன்னேகால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களுக்கு எவ்வளவு சலுகைகள் கிடைக்கிறது? நமக்கு பழைய பென்ஷன் திட்டம் தான் தேவை.
தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதியின் போது நான் கருணாநிதியின் மகன் என்று சொன்னவர் இன்று கையில் பணம் இல்லை என்கிறார். தெளிவாக காய் நகர்த்தி 4 வருடம் ஆட்சியை நடத்தி விட்டார். 43 எம்எல்ஏக்களை எங்கள் ஓட்டுக்களால் பெற்றுத் தந்திருக்கிறோம். ஆனால் அதை மறந்து விட்டீர்கள். உங்களை நம்பினோம் ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை விட மோசமானவர் என நிரூபித்தீர்கள்.
எனவே திமுகவை எதிர்கட்சியாக கூட இல்லாமல் ஆக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தேர்தல் ஆணையர் எஸ்.பாலமுருகன், துணை தேர்தல் ஆணையர்கள் எம்.சவுந்தர்ராஜன், டி.தீபன்சக்கரவர்த்தி, தோழமை சங்க நிர்வாகிகள் ம.பரிதிமால்கலைஞன், எஸ்.சையத்ஜலால், ஜே.ராஜா, கி.ரமணன் தெ.பி.புனிதா, ஏ.சண்முகம், க.பெருமாள், ஏ.ஏழுமலை, மா.மகாதேவன், பி.விஜயகுமார், பி.கிருஷ்ணமூர்த்தி, ச.விஜயா, அ.மிருணாளினி, ஏ.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தாசில்தார் கே.துரைராஜ், மாவட்ட துணை தலைவர்கள் ப.முருகன், வீ.குமாரவேலு, எம்.செந்தில்நாதன், மா.ராஜசேகரன், க.முருகானந்தம், மாவட்ட இணை செயலாளர்கள் அழ.உதயகுமார், ஜெ.பெரியசாமி, அ.இப்ராஹிம், அ.சுரேஷ், பெ.ர.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் க.சிவக்குமரன் நன்றி கூறினார்.