தெருவிளக்கு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அதில் பெரிய விமர்சனத்திற்கு ஆளாகி விடுவோம், நேராக அரசாங்கத்தை தான் திட்டுவார்கள் என அதிகாரிகளிடம் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மாவட்டத்திலுள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
அரசை பொருத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மட்டும்தான் மக்கள் பிரதிநிதியாக உள்ளனர். அந்தந்த ஒன்றியங்களைச் சார்ந்த ஒன்றிய குழு உறுப்பினரிடம், ஒன்றிய குழு தலைவரிடம் மக்கள் நேரடியாக முறையிடுகிற வாய்ப்பு இருந்தது அப்போது. அதில் உங்களை (அதிகாரிகள்) அழைத்து இதையெல்லாம் செய்யுங்கள் என்று சொன்னபோது விதிக்கு உட்பட்டு நீங்கள் செய்திருப்பீர்கள்.
இப்போது சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து தான் கோரிக்கைகளை மக்கள் வைப்பார்கள். அந்த மனுக்களை உங்களிடம் கொடுத்து தீர்வு காண வேண்டிய நிலை இருக்கிறது.
அடுத்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வரை இந்த மக்கள் பிரதிநிதிகள் சொல்லுகிற மக்களுடைய பிரச்சனைகளை, பொது பிரச்சனைகளை விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் நேரடியாக செய்யலாம். விதிகளுக்கு உட்படாதவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் முக்கிய திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியிலே துரிதமாக செயல்பட வேண்டும். அரசு உங்கள் மீது வைத்த நம்பிக்கையில்தான் தனி அலுவலர் கொண்டு நிர்வாகத்தை நடத்தலாம் என முடிவெடுத்திருக்கிறோம்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏற்கனவே நிர்வாகத்தை நடத்தி இருக்கிறார்கள். நீங்கள் நிர்வாகத்தை மேற்கொள்கிற போது நீங்கள் சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஊராட்சி தலைவர், யூனியன் சேர்மனே பரவாயில்லை என்று பேசும் நிலை ஏற்பட்டால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு தனி மனிதனுக்காக இதை நான் பேசவில்லை. ஆட்சிக்காக தான் பேசுகிறேன்.

ஆட்சியில் நாங்கள் இருப்பதால்தான் சட்டத்தை நிறைவேற்றி உங்களை தனி அலுவலராக ஆக்கியிருக்கிறோம். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆணையாளர்களை தனி அலுவலராகவும், 18 ஒன்றியங்களுக்கு திட்ட அலுவலரையும் தனி அலுவலராக ஆக்கியிருக்கிறோம்.
தனி அலுவலர்கள் என பொறுப்பு வகிக்கிற நீங்கள் ஏற்கனவே நடத்திய நிர்வாகத்தை விட சிறப்பான நிர்வாகத்தை நடத்தினால்தான் ஆட்சிக்கு நல்ல பெயர் வரும். ஆட்சிக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்றால் தனி அலுவலர்களான நீங்கள் மக்கள் பிரச்சினைகளை அறிந்து கொண்டு உடனுக்குடன் பணியாற்றினால் தான் ஆட்சிக்கு நல்ல பெயர் வரும்.
கிராம ஊராட்சி செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். ஊராட்சிகளில் கிராம உதவியாளர் இருப்பார். நீங்கள் அவர்களை கண்காணிக்கவில்லை என்று சொன்னால் வேறு விதமாக போய்க் கொண்டிருக்கும். ஊராட்சி நிதியை சரியாக பயன்படுத்துகிறார்களா? என்பதை அதிகமாக கண்காணிக்க வேண்டும்.
கிராமப்புற சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் முக்கியத்துவம் தர வேண்டும். தெருவிளக்கு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அதில் பெரிய விமர்சனத்திற்கு ஆளாகி விடுவோம். நேராக அரசாங்கத்தைத்தான் திட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு அமைச்சர், திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம் வட்டாட்சியர்கள் உபயோகத்திற்கு புதிய வாகனங்களை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் க.தர்ப்பகராஜ், ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்க், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.