போலீஸ் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டதால் பிடித்துச் சென்ற தொண்டரை போலீசார் விடுவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் தமிழக முதல்வரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியபோது, செய்யாறில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்தான் தருமபுரியில் சிப்காட் வேண்டும் என்று கூறுகிறார்கள் என பாமகவை தாக்கி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவை சேர்ந்த பாலாஜி என்பவர் பொதுக்கூட்ட மேடையின் முன் நின்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினார்.
இதனால் அங்கு சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. கோஷம் எழுப்பிய நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பேசிய ஆரணி எம்பி செய்யாறில் சிப்காட் கொண்டு வந்தே தீருவோம், இங்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட நபர் சிப்காட்டில் தான் பணிபுரிகிறார் என்பது தெரிய வருகிறது, அவருக்கு சூடு, சொரணை இருந்தால் அவர் அந்த சிப்காட் பணியை ராஜினாமா செய்து விட்டு என்னிடம் வந்து பேசட்டும் என காட்டமாக கூறினார்.
பேசி முடித்ததும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி கூட்டதிலிருந்து புறப்பட்டு சென்றார். அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த போலீசார் கோஷம் எழுப்பிய அதே கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரை குண்டு கட்டாக இழுத்துச் சென்று போலீஸ் ஜிப்பில் ஏற்றி செய்யார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதை கேள்விப்பட்டதும் செய்யாறு தொகுதி பாமகவினர் 50-க்கும் மேற்பட்டோர் செய்யாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகளும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது பாமக நிர்வாகிகளுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் இருதரப்பினரிடத்திலும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். பிறகு பிடித்து வைத்திருந்த பாமக தொண்டர் பாலாஜியை விடுவித்தனர்.