கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
மனித மலக் கசடுகளை பிரித்து மண்புழு உரமாகவும், விவசாயம் போன்ற பயன்பாடுகளுக்கு தண்ணீராகவும் மாற்றும் (FSTP-Faecal Sludge Treatment Plant) சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 2 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் போளூர் வட்டம் 99புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் தர்ப்பகராஜிடம் மனு அளித்தனர். அதில் திரவக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்தின் மிக அருகாமையில் குடியிருப்புகள் கோயில்கள், நீர்நிலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. திரவக்கழிவுகள் இங்கு சேகரிக்கப்படும்போது துர்நாற்றம் வீசுவதோடு திரவக்கழிவுகள் விவசாய விளைநிலங்கள் அருகிலுள்ள நீர்நிலைகளில் கலக்கவும் வாய்ப்புள்ளது எனவே அதற்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டிருந்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் போது ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கிராம மக்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் வந்து முற்றுகை போராட்டத்தை நடத்தினர். பிறகு நுழைவு வாயிலில் தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பிறகு அவர்கள் கலெக்டர் தர்ப்பகராஜை சந்தித்து முறையிட்டனர். பொறியாளரை அனுப்பி சுத்திகரிப்பு நிலையம் எப்படி பாதுகாப்பாக இயங்கும் என்பதை விளக்கிக் காட்ட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார். அவரிடம் ஆட்சேபனை மனுவை அளித்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
கலெக்டரிடம் பெரிய அய்யம்பாளைம் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
எங்கள் கிராமத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் கூலி வேலை மற்றும் விவசாய வேலை செய்துதான் பிழைத்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு 3 கிணறுகள், 3 போர்வெல் மற்றும் ஏரி ஒன்றும் உள்ளது. இவை அனைத்துக்கும் நீர் இம்மலையிலிருந்து கால்வாய் வழியாக செல்கிறது.
500 மீட்டர் ஏரிக்கால்வாயை சமன்படுத்தி, கால்வாயை மறைத்து மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளனர். இதனால் எங்கள் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும் அபாயகரமான நோய் தொற்றுகள் ஏற்பட்டால் அவற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள போதிய பொருளாதார வசதி இல்லை. பெரிய இன்னல்கள் ஏற்படும் என்பதால் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
கண்ணமங்கலம் பேரூராட்சியிலிருந்து கழிவுகளை கொண்டு வந்து எங்கள் கிராமத்தில் சுத்திகரிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையம் வருவதற்கு விடமாட்டோம். கலெக்டரிடம் நடத்திய பேச்சு வார்த்தை திருப்தியில்லை. அடுத்த கட்டமாக பெரிய அளவில் பேராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என பெரிய அய்யம்பாளையம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2-வது கிராமத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியிருப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.