திருவண்ணாமலை அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் சிக்கியுள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் செல்லும் சாலையில் உள்ள நீலந்தாங்கல் ஏரி கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடந்ததை இன்று காலை அங்கு வந்தவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொலையானவர் புதுச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் அய்யப்பன் (வயது 35) என்பது தெரிய வந்தது.
புதுச்சேரியில் இவர் மீது கொலை, கொள்ளை என 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த வருடம் புதுச்சேரியில் தங்கும் விடுதி ஒன்றில் வெளிமாநில அழகிகளை வைத்து விபச்சார தொழில் நடத்தியதாக அய்யப்பன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விலை உயர்ந்த கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். புதுச்சேரியில் எதிரிகள் அதிகமானதால் மறைந்து வாழ திருவண்ணாமலையை தேர்ந்தெடுத்தார். திருவண்ணாமலை-மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள வேலையாம்பாக்கத்தில் நண்பர்களுடன் சீட்டாட்டம் ஆடி பொழுதை கழித்து வந்தார்.
இதை தெரிந்து கொண்ட அவரது நண்பர்கள் புதுச்சேரியிலிருந்து காரில் வந்து அய்யப்பனை கத்திமுனையில் கடத்திச் சென்று நீலந்தாங்கல் ஏரிக்கரையில் கொலை செய்து விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது சம்பந்தமாக வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் சந்துரு, முத்து உள்பட 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம்-கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாட்டம் அமோகம்
வேலையம்பாக்கத்தில் பல வருடங்களாக மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடந்து வருகிறது. அங்கு சாத்தனூர் அணை கால்வாய் செல்லும் பகுதியில் பக்கத்து ஊர் மற்றும் வெளியூரிலிருந்து வருபவர்கள் குரூப், குரூப்பாக உட்கார்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு வேலையம்பாக்கம் அருகில் கள்ளக்குறிச்சி பார்டரில் உள்ள டாஸ்மாக் கடையிலிந்து சரக்கு விநியோகிக்கப்படும். இங்கு சீட்டாட்டம் ஆட வரும் சிலர் அருகில் உள்ள மணலூர்பேட்டையில் ரூம் எடுத்து தங்குவதும் உண்டு. அந்த வகையில் தான் கொலையான அய்யப்பன் இங்கு வந்து ஜாலியாக சரக்கு அடித்து விட்டு சூதாட்டம் ஆடி வந்துள்ளார் என்பதும், மேலும் சிலருக்கு சீட்டாட்டம் ஆட பணம் கடனாக கொடுப்பார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.