திமுக எம்.எல்.ஏக்கள் கையூட்டு பெறாமல், எதையும் எதிர்பார்க்காமல் சிறப்பாக பணியாற்றி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை அருகே கலசப்பாக்கம் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் முதன்முறையாக கீழ்தாமரைப்பாக்கம் மற்றும் தென்மகாதேவமங்கலம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.15 கோடியே 5 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று திறந்து வைத்தார். மேலும் போக்குவரத்து துறை சார்பாக 17 புதிய பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் இருந்த 1281 தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக மாற்றவேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 1191 தரைபாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கீழ்தாமரைப்பாக்கம் மற்றும் தென்மகாதேவமங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.15.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் கட்டப்பட்டதால் தென்மகாதேவமங்கலம், கடலாடி, கீழ்தாமரைப்பாக்கம், தாமரைபாக்கம், கிழக்குமேடு, மேப்பத்துரை, கீழ்பொத்தரை, கோடிகுப்பம், பெரியகிளாம்பாடி, சிறுகிளாம்பாடி, நயம்பாடி, பழங்கோயில், காஞ்சி, கீழ்பாலூர், மேல்சிறுவள்ளூர், காரப்பட்டு உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த சுமார் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவது மட்டுமல்லாது, விவசாயிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களும் பயன்பெறுவார்கள்.
மேலும் கலசப்பாக்கம் தொகுதியில் 2021-22 நிதியாண்டில் ரூ.36.91 கோடி மதிப்பீட்டில் 33.50 நீளமுள்ள சாலைப்பணிகளும், 2022-23 நிதியாண்டில் ரூ.20 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 19.40 கி.மீட்டர் சாலை மற்றும் பாலப்பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நான்கு ஆண்டுகால ஆட்சியில் ரூ.91 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுப்பணித்துறை சார்பாக ஜமுனாமரத்தூரில் ரூ. 3 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது. படைவீட்டில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையமும், ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கழிவறை வசதிகளுடன் கட்டிடமும், ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் 21 அரசினர் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் ஆழ்துளை கிணறு வசதிகளுடன் குடிநீர் வசதிகளும், ரூ.5 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 5 அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் என பொதுப்பணித்துறை மூலம் பள்ளிகளுக்கு அதிகளவில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிப்பட்டுள்ளது.
மேலும் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளதால், மக்கள் பயன்பெறுவது மட்டுமல்லாது கிராமங்களும் வளர்ச்சி அடையும்.
மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள் நமது பகுதியில் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்கள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றுகிறார்கள். பொது வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும், கையூட்டு பெறாமல் இருக்க வேண்டும். என்னால் சொல்ல முடியும், நம்முடைய தொகுதியில் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் கையூட்டு பெறாமல், எதையும் எதிர்பார்க்காமல் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையை ஏற்று சிறப்பாக பணியாற்றுகிற சட்டமன்ற உறுப்பினர்களில் நம்முடைய மாவட்டத்தில் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் க.தர்ப்பகராஜ்,, சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்) நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் தலைமை பொறியாளர் செந்தில், வேலூர் கோட்டப்பொறியாளர் ச.பா.கோரிமா, திருவண்ணாமலை கோட்ட செயற்பொறியாளர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.