திருவண்ணாமலையில் க்யூ ஆர் கோடு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாநகராட்சி, ஈசான்ய மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக ஆட்டோக்களுக்கு க்யூ ஆர் கோடு (QR Code) ஒட்டும் பணி நடைபெற்றது. இந்த பணியை இன்று கலெக்டர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
திருவண்ணாமலை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருவண்ணாமலை மாநகர எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் 2061 ஆட்டோ வாகனங்கள் உள்ளன. அவற்றுள் முதற்கட்டமாக 200 வாகனங்கள் கண்டறியப்பட்டன. அவற்றிக்கு போக்குவரத்து காவல் துறையால் க்யூ ஆர் கோடு (QR Code) பொருத்தும் பணி நடைபெற்றது.
மேலும், தகுதியான ஆட்டோக்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியானது வருகின்ற 27.04.2025 அன்று வரை நடைபெறும். மேலும் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்ட தகுதியான ஆட்டோக்கள் மட்டும் திருவண்ணாமலை மாநகர பகுதிகளில் இயக்க அனுமத்திக்கப்படும்.
ஆட்டோ குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க வசதியாக அனைத்து ஆட்டோக்களிலும் 04175 – 232266 என்ற தொலைபேசி எண் எழுதப்பட்டுள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். க்யூ ஆர் கோடு பொருத்தப்படாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் நகர பகுதிக்குள் வரும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்.
ஆட்டோ இயக்கம் தொடர்பான புகாரை கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். பொது மக்களின் பாதுகாப்பான பயணம் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறும், புகாருக்கு இடமளிக்காவண்ணம் வாகனங்களை இயக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கருணாநிதி (திருவண்ணாமலை), சிவக்குமார் (ஆரணி), போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.