திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோயில் மேலாளர் செந்தில் மீது நடவடிக்கை எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம் கோயில் நன்கொடையாளர் என கூறப்படும் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த பெண் பணியாளர், கோயில் மேலாளர் செந்தில் முன்னிலையில் வாடி, போடி என பேசி தவறான கண்ணோட்டத்தில் தன்னை கோயில் பணியாளர் சதீஷ் என்பவர் அணுக முயன்றதாக குறிப்பிட்டிருந்தார்.
சதீஷ் என்பவர் மேலாளர் செந்திலுக்கு மிகவும் வேண்டப்பட்டவராம். இதனால் முக்கியமான அபிஷேக பணிகளை கவனிக்கும் பொறுப்புக்கு சதீஷ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்தான் அந்த பெண் ஊழியர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறியுள்ளவற்றில் சில…
“சதீஷ் திட்டிய வீடியோவை யாரிடமாவது காண்பித்தால் உன்னை தூக்கி வெளியில் போட்டு விடுவேன் என்று மேனேஜர் செந்தில் மிரட்டினார். சதீஷ் என்பவர் என்னை அசிங்கமாக திட்டும்போது அங்கு வேலை செய்பவர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர். எவன் கூப்பிடுகிறானோ போய் செய்யேண்டி என திட்டுகிறார். மற்றவர்களை சாமி சன்னதி, அம்மன் சன்னதியில் பணி அமைத்துகிறார்கள். என்னை சாமி சன்னதி, அம்மன் சன்னதி வேறு எங்கேயுமே பணியாமர்த்த வில்லை. அன்னதான பணியில் மட்டுமே செய்து வருகிறேன்.
நான் ஏதாவது பேசினால் மேனேஜரிடம் போய் சொல்லி விடுகிறார்கள். அவர் அவர்களுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார். மேனேஜர் எதிரிலேயே என்னை வாடி, போடி என பேசுகிறார். அவர் கண்டு கொள்ளவில்லை. அவர் பக்கம் தான் மேனேஜர் சப்போர்ட் செய்கிறார்.
2022-ல் வேலைக்காக ஜெசி (கோயில் இணை ஆணையர்) டிரைவர் பிரபுவிடம் 4 லட்சம் தந்தேன். சதீஷ் என்பவர் பொண்டாட்டி போல் இருக்க வேண்டும் என நினைக்கிறார். நான் அந்த மாதிரி எல்லாம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நான் கோயில் வேலைக்கு தான் வந்தேன் என்று சொன்னேன். மேனேஜர் எல்லாத்தையும் கண்ட்ரோல் செய்வார் என்று நினைத்தேன். மூடிட்டு போய் செய்யுடி, எங்கனா போய் செய், எவன் கூப்பிடறானோ போய் செய் என சதீஷ் சொன்னார், பச்சையாக பேசினார். அப்போது மேனேஜரும் உடன் இருந்தார்.
எல்லோரும் நம்மளை வேலையை விட்டு தூக்கிடுவார்கள் என பயப்படுகிறார்கள். வெளியில் சொனால் வேலையை பர்மனென்ட் ஆக்க மாட்டார்கள் என பயப்படுகிறார்கள். என்னுடன் பெறுக்கிற வேலைக்கு வந்தவர்கள் பாதி பேர் சாமி சன்னதி, அம்மன் சன்னதியில் பணியாற்றி இருக்கிறார்கள். அதை விட்டால் நெய் கடையில் பணி அமர்த்திருக்கிறார்கள்”
இப்படி அந்த ஆடியோ பதிவு நீள்கிறது.
இந்த ஆடியோ வெளியான நிலையில் கோயில் பணியாளர் சதீஷ் என்பவரை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சஸ்பெண்ட் செய்திருப்பதாக செய்தி வெளியாகியது. இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. சதீஷ் என்பவரின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருந்த கோயில் மேலாளர் செந்தில், வேலைக்கு பணம் வாங்கியதாக சொல்லப்பட்ட சபரி ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து இந்து முன்னணியினர் மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கோயில் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை நகர போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரிமாண்ட்டுக்கு அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பாஜகவினர் மாவட்ட தலைவர் கே.ரமேஷ் தலைமையில் போலீஸ் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை முடிவில் கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் விடுதலை செய்யப்பட்டனர்.
போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
உலகப்புகழ்பெற்ற ஆலயம், பஞ்சபூத ஸ்தலத்தின் அக்னி ஸ்தலம், வருடம் முழவதும் கோடிக்கணக்கான பக்தர்களால் வணங்கப்படும் கார்த்திகை தீபம் முதலான வெகுசிறப்பான உற்சவங்களால் போற்றி துதிக்கப்படும் ஆலயம், தாயார் உண்ணாமலையம்மனுக்கு சிவனார் தனது தேகத்தில் சரிபாதி இடமளித்து அர்த்தநாரீஸ்வரராக தோன்றிய இப்புண்ணிய ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள தற்காலிக பெண் பணியாளர் ஒருவரின் போன் உரையாடல் சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இதில் ஆலயத்தின் அபிஷேக பிரிவின் சதீஷ் என்பவர். அப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாச பேச்சு பேசியும், உடன் ஆலய மேலாளர் செந்தில்(எ)கருணாநிதி அவர்கள் அவன் குடித்துவிட்டு பேசுகிறான் நீ கவலை படாதே எனவும். பணியில் உள்ளோர் குடித்து விட்டு ஆலயப்பணியில் உள்ளதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் அவர்கள் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்த பேச்சுக்களும், தனக்கு தாராளமாக நடந்துகொள்ளும் பெண்களை மட்டும் சரியான இடத்தில் பணி அமர்த்தியும், சரிவராத பெண்களை ஒழுக்கமற்ற கும்பலான கோவில் பணியாளர்களான மேலாளர் செந்தில்(எ)கருணாநிதி, மற்றும் சதீஷ், ரூபாய் 4 லட்சம் பணிக்கான வாய்ப்பினை வாங்கிதந்த கோவில் இணை ஆணையரின் டிரைவர் பிரபு அவர்கள் மீதும் பாலியல் மற்றும் லஞ்சப் புகார் வழக்காக பதிவு செய்ய இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
(மேற்கண்ட நடைபெற்ற சம்பவத்தில் இதுவரை கோவில் நிர்வாகம் தலையிடவில்லை. அறங்காவலர் மட்டும் பணியிடை நீக்கம் என்று சதீஷ் ஒருவரை மட்டும் கண்துடைப்பு நாடகம் நடைபெறுகிறது தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.)
திராவிடல் மாடல் ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் நபரை கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆடியோ…