அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் ஓய்வு எடுத்துச் செல்லும் வகையில் கியூ வரிசை கொட்டகை அமைக்க ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே வேலைக்கு 2 டெண்டர் விடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புராதன உலகின் மணிமகுடமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், தென்னிந்திய கட்டிடக் கலை மற்றும் சிற்ப அம்சங்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அழகிய தூண்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளன.
கோயிலின் சுவர்கள் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அண்ணாமலையார் கோயில் வழிபாட்டுத் தலமாக மட்டும் இல்லாமல் ஒரு கலைப் படைப்பாகவும், பழங்காலத்தின் மகிமையின் நினைவுச் சின்னமாகவும் விளங்கி வருகிறது.
கடந்த சில வருடங்களாக நடைபெற்ற கோயில் தூண்களை துளையிட்டு பைப்புகளை பதித்தது, சிலையில் துளையிட்டு சிசிடிவி கேமரா பொருத்தியது, கோபுர சிற்பம் விழுந்து உடைந்தது, பெரிய வாகனங்கள் உள்ளே சென்றதால் கோபுர சிற்பங்கள் சேதமடைந்தது, நடராஜரின் ஒவியத்தில் துளையிட்டு மின்விசிறி பொருத்தியது போன்ற செயல்கள் பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளன.
இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலின் நான்காம் பிரகாரத்தில் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, அமாவாசை அன்று சுவாமி செல்ல முடியாதபடி வழிமறித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், இதற்கு முன் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரங்கள் பல இருந்ததாகவும், இவை வெட்டப்பட்டு சொகுசு பங்களா கட்டப்படுவதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த கட்டுமானப்பணிகள் எதற்காக? என்று கோயில் நிர்வாகமும் தெளிவுப்படுத்தவில்லை. விஐபிகள் தங்கி சாமி தரிசனம் செய்யும் வகையில் இங்கு அறைகள் கட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பக்தர்கள் ஓய்வு எடுத்து வரிசையில் வரும் வகையில் தற்காலிக ஷெட் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரே பகுதியில் தற்காலிக ஷெட் அமைக்க 2 விதமான டெண்டர் வெளியாகி உள்ளது. ரீச்-1என்று (வடஒத்தவாடைத் தெரு பேகோபுரம் TO அம்மணி அம்மன் கோபுரம்) ரூ.1 கோடியே 74 லட்சத்து 20 ஆயிரத்திற்கும், ரீச்-2 என்று (வடஒத்தவாடைத் தெரு பேகோபுரம் TO அம்மணி அம்மன் கோபுரம்) ரூ.1 கோடியே 94 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
நாளை (29-ஆம் தேதி) டெண்டர் திறக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெயருக்குத்தான் டெண்டர் அறிவிப்பு, மற்றபடி கோயில் நிர்வாகமே ஒப்பந்ததாரரை நியமித்து வேலைகளை தொடங்கி விட்டது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
ஒரே வேலைக்கு 2 டெண்டர் விடப்பட்டது ஏன்? என்பது குறித்து ஆலய வழிபடுவோர் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர்.ரமேஷ் தெரிவித்திருப்பதாவது,
1500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்திற்கு முன்னால் ஒரு ஷாப்பிங் வளாகத்தை கட்ட முயன்றதை நவம்பர் 2023-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நிறுத்தியது. கோயிலின் 2017 ஆம் ஆண்டில் கோயிலை ஆய்வு செய்த யுனெஸ்கோ நிபுணர்கள் நான்காவது பிரகாரத்தில் இரண்டு காட்டேஜ்கள் கட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர்.
இப்போது, இந்த பழமையான கோயிலின் 4 வது பிரகாரத்தில் சில பெரிய கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. இதற்காக பல மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை 1959-ன் சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி உள்ளது.
ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ‘நிர்வாகம்’ என்று அழைக்கப்படும் நிறுவனம், பக்தர்களுக்காக தற்காலிக ‘கியூ லைன்’ கொட்டகைகளை கட்டுவதற்கு மட்டுமே டெண்டர்களை கோரியுள்ளது. இந்த புனித க்ஷேத்திரத்தில் ஆசி பெற வரும் லட்சக்கணக்கானோருக்கு இது சிறந்ததா?

தமிழ்நாடு அரசு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியத்திலிருந்து தப்பிக்க, ரூ.2 கோடிக்குக் கீழே இரண்டு டெண்டர்களாகப் பிரிக்கப்பட்ட ஒரு டெண்டர் வேலை. ரூ.1.74 கோடிக்கு வேலை 1, ரூ.1.94 கோடிக்கு வேலை 2 என மொத்தம் ரூ.3.68 கோடி, தற்காலிக கொட்டகைகளுக்கு.
இந்து சமய அறநிலையத்துறை சட்டம், 1959 இன் கீழ் உள்ள விதிகளின்படி, ரூ.2 கோடிக்குக் குறைவான குடிமராமத்து பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அங்கீகரிக்கலாம். அதற்கு மேல் உள்ள எதையும், தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இந்தக் கோயிலில் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எந்த நியமன உத்தரவுகளும் இல்லாமல் நிர்வாக அதிகாரி செயல்பட்டு வருகிறார். இந்து சமய அறநிலையத்துறையின் சட்டவிரோத நிர்வாக அதிகாரி மற்றும் ஆணையரின் இந்த டெண்டர் மோசடி, ஒற்றை வேலையை பல டெண்டர்களாகப் பிரிக்கக் கூடாது என்று தெளிவாகக் கட்டளையிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை வெளிப்படையாக மீறி உள்ளது.
இந்த பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய கோயிலில் எந்த நவீன கட்டுமானங்களும் நடைபெற முடியாது. போலி நிர்வாகிகள் நமது தெய்வீக மரபுகளையும் பண்டைய கோயில்களையும் எவ்வளவு காலம் அவமதிப்பார்கள்?
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து கோயிலை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். பழமையான கோயிலுக்குள் மேற்கொள்ளப்படும் இந்த சட்டவிரோத பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காத்திருப்பு அறைகள் கட்டப்படுவதை வரவேற்றுள்ள ஆன்மீகவாதிகள் அது உண்மையிலேயே சாதாரண பக்தர்களுக்கு பயன்பட வேண்டுமே தவிர விஐபிகளுக்காக மாறி விடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் நான்காம் பிரகாரத்தில் சாமி வரும் பாதையை தவிர்த்து கோயிலுக்கு வெளியே குறிப்பாக ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை கைவிட்டு விட்டு அங்கு காத்திருப்பு அறைகளை கட்டலாமே? என கேள்வி எழுப்பியுள்ளனர்.