பழங்கால கோயிலில் இவ்வளவு கருவிகளா? என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சிவனடியார்கள் அறப்பணி நிலையத்தை துவக்கி ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தில் கிபி 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த ஸ்ரீ கங்கா தேவி அம்மை உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் உள்ளது. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்சியின் தலைமை படைத்தலைவனாக இருந்த மாலிக்கபூர் படையெடுப்பின் போது இந்த கோயில் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த கோயிலின் அருகில் மாலிக்கபூர் படைகள் தங்கியிருந்த காரணத்தால் அந்த கிராமம் மல்காபூர் கிராமம் என அழைக்கப்பட்டு வருகிறது.
சிதலமடைந்த இந்த கோயில் கிராம மக்கள், சிவனடியார்கள் முயற்சியோடு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்திரன், சூரியன், சனீஸ்வரன், குருபகவான் உள்ளிட்ட நவகிரக சன்னதிகளும், விநாயகர், ஆஞ்சநேயர் சன்னதிகளும், இந்த நவகிரக சன்னதிக்கு மேல் 15 உயரத்தில் மகா சிவலிங்கம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் சிவனடியார்கள் இணைந்து காசி விஸ்வநாதர் கோயிலில் அறப்பணி நிலையத்தை தொடங்கியுள்ளனர். ஏழை-எளிய விவசாயிகள், கூலி தொழிலாளிகள், கிராம மக்களுக்காக இங்கு கடப்பாரை, மண்வெட்டி, ஸ்பிரேயர், காங்கிரீட் ஷீ, தேங்காய் உரிக்கும் கருவி, திம்ஸ் கருவி, மரம் அறுக்கும் ரம்பம், ஏணி, வைக்கோல் சேகரிக்கும் கம்பி, பவர் டூல்ஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட கருவிகள் இங்கு உள்ளன.
இந்த அறப்பணி நிலையத்தின் முன்பக்கம் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பெயர், செல்போன் எண் ஆகியவற்றை எழுதி விட்டு கருவியை எடுத்துச் செல்ல வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த மையம் செயல்படும். கருவியை எடுத்துச் செல்பவர்கள் இரவு 8 மணிக்குள் அந்த நிலையத்தில் கருவியை கொண்டு வந்து சேர்த்திட வேண்டும். இது முற்றிலும் இலவச சேவையாகும். கருவியை பயன்படுத்துபவர்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை. கருவிகள் பழுதடைந்தால் அறப்பணி நிலையம் சார்பிலேயே பழுது பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த அறப்பணி நிலையம் ஏழை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த அறப்பணி நிலையத்தை தொடங்கியுள்ள சிவனடியார்கள் கூறுகையில், விவசாயம், கட்டிட வேலைகள், வீட்டு வேலைகளுக்கு தேவையான கருவிகள் அனைத்தும் இங்கு உள்ளன. இவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறுகிய காலத்த்தில் 100ஐ நெருங்க உள்ளது என்றனர்.
சைவ சமய அறப்பணிகள் என்பது அறநெறி, நல்லொழுக்கம், பிறருக்கு உதவி செய்தல், தான தர்மம் செய்தல், ஆலயங்களை நிர்வகித்தல் போன்ற செயல்களை உள்ளடக்கியது ஆகும். அந்த வகையில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை பக்தர்கள், கிராம மக்களுடன் இணைந்து சிறப்பாக நிர்வகித்து வரும் சிவனடியார்கள், ஏழை-எளிய மக்களுக்கு உதவி செய்து வருவது போற்றப்படக்கூடியதே.