கழிவு நீர் கால்வாய்க்காக ரூ.10 லட்சத்திலான இடத்தை
இலவசமாக தர முன்வந்த தலைமையாசிரியர்
திருவண்ணாமலையில் சுகாதார சீர்கேட்டினால் மக்களுக்கு நோய் நொடிகள் ஏற்படாமல் தடுக்க ரூ.10 லட்சம் மதிப்புள்ள இடத்தை இலவசமாக தர முன்வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை கண்ணன் தெரு மற்றும் தென்றல் நகர் 9 வது குறுக்குத் தெருவில்¸ வீடு கட்டிய காலத்திலிருந்து குடியிருப்புவாசிகளுக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரப்படவில்லை. இதனால் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் ஒவ்வொரு வீடுகளின் முன்பு குட்டை போல் தேங்கி தெருக்களில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவி வருவது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
நல்ல பதில் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இல்லாத கால்வாயை தூர் வாரி தெருவில் கழிவுநீர் வழிந்தோடுவததை தடுத்து விட்டதாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து பதில் வந்தததை பார்த்து அழுவதா¸ சிரிப்பதா என தெரியாமல் தெரு மக்கள் திகைத்து போயினர். பின்னர் கால்வாய் இல்லாதது குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தனர். அதன்பிறகு எந்த பதிலும் இல்லை¸ நடவடிக்கையும் இல்லை.
இதுபற்றி உள்ளாட்சி துறையில் விசாரித்ததில் அப்பகுதியில் கால்வாயை கட்டி அதை பிரதான கால்வாயில் இணைக்க வேண்டும். ஆனால் வழியில் குடியிருப்புகளும்¸ வீட்டுமனைகளும் இருப்பதால் கால்வாய் கட்ட வழியில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் 100வீடுகளுக்கும் கழிவுநீரை தங்கள் வீடுகளுக்கு முன் தேக்கி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கண்ணன் நகர் குடியிருப்புவாசிகளின் துயரை போக்கும் வகையில் பெருந்தன்மையோடு தனக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை கால்வாய் கட்ட இலவசமாக தருவதாக தெரிவித்துள்ளார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் காசிலிங்கம். இவர் கணியம்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு வேங்கிக்கால் கண்ணன் நகரில் பாபா ரெசிடென்சி என்ற பெயரில் உயர்தரமான தங்கும் விடுதியை நடத்தி வருகிறார்.
பிரதான கால்வாய்க்கு செல்லும் வகையில் அவரது ரெசிடென்சி வழியாக கால்வாய் கட்ட வேண்டும் என்றால் 300 அடி இடம் தேவைப்படும் என்றும்¸ இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் என்றும் இடத்தை இலவசமாக தருகிறேன் என காசிலிங்கம் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
இதுகுறித்து காசிலிங்கம் தெரிவிக்கையில் தெரு மக்களின் நலன் கருதி கழிவு நீரை தற்போது தன்னுடைய ரெசிடென்சியின் ஒரு பகுதியில் தேக்கி வைக்க அனுமதித்திருப்பதாவும்¸ கால்வாய் கட்ட இடம் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
காசிலிங்கம் இடம் தர முன்வந்துள்ளதை பற்றி தெரிவித்தும் அதிகாரிகள் கண்டும்¸ காணாமல் இருப்பதாகவும்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உடனடியாக கால்வாயை கட்டி சுகாதார சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு அடி இடத்தை கூட விட்டுக் கொடுக்க மனம் வராதவர்கள் மத்தியில் எந்த வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பொது காரியத்திற்காக இடத்தை இலவசமாக தருவதாக அறிவித்துள்ள ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் காசிலிங்கத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.