Homeசெய்திகள்சிமெண்ட் சாலையாக மாறும் திருவண்ணாமலை மாடவீதி

சிமெண்ட் சாலையாக மாறும் திருவண்ணாமலை மாடவீதி

திருவண்ணாமலை தேரோடும் மாடவீதியை ரூ.15 கோடியில் சிமெண்ட் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.

திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தேர் ஒடக் கூடிய மாட வீதியினை ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக மாற்றி அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த திட்டத்தினை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு  அடிக்கல் நாட்டி¸ தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது¸

இந்த மாவட்டத்தில் தான் அதிக திட்டங்கள்

நெடுஞ்சாலை துறை அமைச்சராக நான் பதவியேற்ற பிறகு இது வரைக்கும் இல்லாத அளவு இந்த நிதி ஆண்டில்  ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் 186 பணிகளை 287.17 நீளத்திற்கு 321 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளை அகலப்படுத்துவது¸ உறுதிப்படுத்துவது, சிறு பாலங்கள் கட்டுவது போன்ற பணிகள் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வருவது இந்த மாவட்டத்தில்தான்.

ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்தை இணைக்கும்  இரு வழி சாலைகளை நான்கு வழி சாலைகளாக மாற்றுவதுதான் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டமாகும்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடலூர்- சித்தூர் சாலையில் அதாவது திருவண்ணாமலையிலிருந்து திருக்கோயிலூர் வரை 19.50 கிலோ மீட்டர் தூரம் ரூ.140 கோடியில் நான்கு வழி சாலையாக மாற்றப்படுகிறது. அதேபோல் திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி¸ அரூர் வழியாக தர்மபுரியை இணைக்கும் வண்ணம்  ரூ.120 கோடியில் நான்கு வழி சாலை அமைக்கப்படுகிறது. இது மட்டுமன்றி 146.30 கிலோ மீட்டர் கிராம சாலைகள் ரூ.168 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

See also  திருவண்ணாமலைக்கு போதை பொருள் வரும் வழி- எ.வ.வேலுவுக்கு கிடைத்த தகவல்

2016ஆம் ஆண்டு நான் தேர்தலில் நின்றபோது ஒரு வாக்குறுதியை தந்தேன். திருவண்ணாமலை ஆன்மீகப் பெருமக்கள் இருக்கிற ஊர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருப்பது தான் பெருமை. தீபத் திருவிழா¸ பௌர்ணமி போன்ற நாட்களில் ஆன்மீகப் பெருமக்கள் அதிக அளவில் வருகின்றனர். அவர்கள் விரும்புகின்ற அளவிற்கு வசதிகள் இங்கு இருந்தால் தான் மேலும் அதிகம் பேர் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதன்மூலம் ஊரில் பொருளாதாரம் வளரும்.இதில் ஆன்மீகமும் பொருளாதாரமும் இணைந்து உள்ளது.

பக்தர்கள் கிரிவலம் வரும்போது தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர்.நடுத்தர குடும்பத்தினர் சாலையோரம் கடைகளை அமைக்கின்றனர்.அதன் மூலம் அவர்களுக்கு பொருளாதாரம் கிடைக்கிறது. நமது ஊருக்கு வரும் கூட்டத்தின் மூலம் பொருளாதாரம் வளரும். அப்படித்தான் எனது பார்வை உள்ளது.

எனவே திருவண்ணாமலைக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நான் தேர்தலில் நின்றபோது ஒரு வாக்குறுதி தந்தேன். 2016இல் ஆட்சிக்கு வந்தால் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. ஆனால் திருவண்ணாமலை மக்கள் என்னை மட்டும் ஜெயிக்க வைத்தார்கள். அதன் விளைவு என்ன? ஐந்தாண்டு காலம் வீணாக போய்விட்டது.

வியாபார பெருமக்கள் ஒத்துழைப்பு

இம்முறை தேர்தலில் நின்றபோது மாடவீதி கான்கிரீட் சாலையாக மாற்றப்படும் என்று சொன்னோம். ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 15 கோடியை ஒதுக்கி அதற்கான பணிகளை துவக்க சொல்லி உள்ளார்கள்¸  இந்த திட்டம் சிறப்பாக நிறைவேற வேண்டுமென்றால் வியாபார பெருமக்களின் ஒத்துழைப்பு எனக்கு அதிகம் தேவைப்படுகிறது. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். தனியாகப் போய் இழக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

See also  திருவண்ணாமலையில் ரூ.1கோடியில் அருங்காட்சியகம்

வியாபார சங்கங்களில் உள்ள பொறுப்பாளர்கள் இந்த பாதை போடும்போது நீங்கள் சென்று சூப்பர்வைசர் வேலை பார்க்க வேண்டும். நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ அதன்படி செய்ய தயாராக உள்ளோம். எங்களுக்கு பாதை சிறப்பாக அமைய வேண்டும். நகராட்சி¸ மின்சாரத்துறை¸ தொலைபேசித் துறை¸ வருவாய் துறை ஆகியவற்றை இணைத்து கலெக்டர் தலைமையில் இப்பணியை நிறைவேற்றிட குழு அமைத்துள்ளோம்.

இந்த ஊரில் பல பேர் ஒப்பந்ததாரராக இருந்தாலும் அவர்களுக்கு சாலை போடுவது பாலம் கட்டுவது போன்றவற்றில் அனுபவம் உள்ளது. ஆனால் கான்கிரீட் சாலை என்பது விமான ஓடுதளம் போன்றது. திருவண்ணாமலை மாடவீதி என்பது தேர் ஓடுகிற பாதை.  எனவே அந்த பாதை சிறப்பாக அமைய வேண்டும்.இல்லையென்றால் பல்வேறு கேள்விகளுக்கு ஆளாக நேரிடும்.

எனவே ஏற்கனவே தரமான பாதை எங்கு போட்டிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தோம். கொங்கு மண்டலத்தில் உள்ள சிவா இன்ஜினியரிங் கம்பெனியினர்  சென்னை பார்த்தசாரதி கோயில் அருகில் தேரோடும் வீதியை அமைத்துள்ளார்கள்.  அந்த பாதையை நான் சென்று நேரில் பார்த்தேன். எனவே முறையாக டெண்டர் விடப்பட்டு சிவா இன்ஜினியரிங் கம்பெனிக்கு இந்த கான்கிரீட் சாலை போடும் பணி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கம் நடைபாதை¸ மத்தியில் கான்கிரீட் சாலையாக மாடவீதி அமைக்கப்படுகிறது. நடைபாதைக்கு கீழ்தான் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படும். தரைக்கு கீழ் தான் மின்கம்பிகள் செல்லும்.மேலே எங்கும் பார்க்க முடியாது. இதற்கு தனியாக ரூ 3.5 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். மேலும் பைப்லைன் களை சரிசெய்ய நகராட்சிக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பாதை அமைக்கும் செலவு ரூ. 25 கோடியைத் தாண்டும்.

See also  திருவண்ணாமலை:19ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்

திராவிட மாடல் என்றால் சிலருக்கு கசக்கிறது.

இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னால் சில பேருக்கு கசக்கிறது. திராவிடம் என்பது நமது மண்ணுக்கு சொந்தம். இந்த மண்ணுக்கும் மொழி உணர்வு¸ பெண்களுக்கு சுய சுதந்திரம் தேவை. அதை செய்கிறோம்.  ஆன்மீகத்திற்கு நாங்கள் செய்தது போல் எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை.காவடி தூக்குவது அலகு குத்துவது¸சாமி கும்பிடுவது¸ சடங்கு செய்வது என்பது தனி மனித சுதந்திரம். இது ஆன்மீகத்துக்கு செய்கிற ஆட்சி. முதலமைச்சர் அத்தனையும் செய்து கொண்டிருக்கிறார்.  கட்சி நடத்த வாய்ப்பில்லாதவர்கள் ஆன்மீகத்தை பிடித்துக் கொள்கிறார்கள்.

திமுக ஆட்சியில்தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அத்தனையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான் ஆன்மீகமும் உள்ளே இருக்கிறது. கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்று சொன்ன கலைஞரின் வார்த்தைகள் எங்களுக்கு திருக்குறள் போலாகும். எனவே ஆன்மீகத்தையும்¸ கழகத்தையும்¸ தமிழக முதல்வரையும்¸ திராவிட மாடல் ஆட்சியையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார் ரெட்டி¸ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப்¸ சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்)¸ எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி)¸ பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்) மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!