திருவண்ணாமலைக்கு போதை பொருள் எப்படி எடுத்து வரப்படுகிறது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
போலீசார் இரவு ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வி துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெறுகிறது.
இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது,
பள்ளி- கல்லூரி அருகில் போதை பொருள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். தங்களது பிள்ளைகள் மீது தாய்- தந்தையர்கள் வைத்துள்ள கற்பனைகள் ஏராளம். குடும்பத்தின் பாரத்தை எடுத்துக் கொள்வான், சகோதரிகளின் திருமணத்திற்கு உந்து சக்தியாக இருப்பான் என்ற நினைப்பு எல்லாம் அவர்களுக்கு இருக்கும். தாய் தந்தையர்களின் கற்பனைகள் சிதைந்து விடக்கூடாது.
போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் மாணவர்களின் வாழ்க்கை சிதைந்து விடும். போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்வது, அவர்களது சொத்தை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் நமது மாவட்டம் முன்னணியில் இருக்க வேண்டும். இது தனிநபர் பிரச்சனை அல்ல, சமுதாய பிரச்சனை. இந்த போதைப் பழக்கத்தினால் கொலை, கொள்ளைகள், பாலியல் வன்முறை, ஜாதி மோதல்கள், சமுதாய சீர்கேடுகள் நடக்கிறது. எனவே பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் விஷயத்தில் தமிழகம் வளர்ந்து விடக்கூடாது. இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
திருவண்ணாமலைக்கு பல பேர் வந்து போகின்றனர். மாவட்டத் தலைநகராக இது உள்ளது. தர்மபுரி,கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை இவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் திருவண்ணாமலைக்கு வந்து போவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. நம்மூர் ஆன்மீக பூமி என்ற காரணத்தினால் கிரிவலம் என்ற பெயரில் பல மாநிலங்களில் இருந்து குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து கிரிவலம் செல்கிறார்கள். எனவே அரசு அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை. மற்ற மாவட்ட காவல்துறையினருக்கு 50 சதவீத விழிப்புணர்வு தேவை என்றால் நமது மாவட்ட காவல் துறையினருக்கு 100சதவீதம் அல்ல 150 சதவீதம் விழிப்புணர்வு தேவை.
திருவண்ணாமலைக்கு வரும் ரயில்கள் ஆந்திரா, மும்பை, கல்கத்தா ஆகியவற்றுக்கு செல்கிறது. திருவண்ணாமலை போலீசார் விழிப்போடு இருக்கிற காரணத்தினால் ரயிலில் வரும் நபர்கள் தண்டரை போன்ற பக்கத்து ரயில் நிலையங்களில் இறங்கி போதைப் பொருட்களை இரு சக்கர வாகனங்களில் நகருக்குள் எடுத்து வருகிற நிலை இருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. எனவே இரவு நேர ரோந்தை காவல்துறையினர் தொடங்க வேண்டும். கிரிவலப் பாதையில் பகல் நேரங்களில் மட்டுமல்ல இரவு நேரங்களிலும் மக்கள் செல்கிறார்கள்.
எனவே கிரிவலப் பாதையில் கண்காணிப்பு கூடுதலாக இருக்க வேண்டும் என்பதால் கிரிவலப் பாதைக்காக மட்டுமே ஒரு தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணி செய்வதன் மூலம் போதை பொருள் எடுத்து வருவதை தடுத்து நிறுத்தி விட முடியும். ஆசிரியர்கள் பாட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.
உன் சிந்தனை, மூளை உனக்கு சொந்தம். எனவே உன் சிந்தனை முன்னோக்கியே இருக்க வேண்டும் என எனக்கு தமிழாசிரியர் மு தனபால் சொல்லிக் கொடுத்தார் அந்த அறிவுரையை பின்பற்றி வருகிறேன். விரோதி உருவானால் அவர்களை அழிப்பது என்பதை விட, அதற்காக நேரத்தை செலவிடுவதை விட, நாம் எப்படி முன்னேற முடியும் என முன்னோக்கி சிந்திக்க வேண்டும் என்ற ஆசிரியரின் அறிவுரையை இன்று வரை கடைபிடித்து கொண்டு வருகிறேன். எனது சிந்தனை முன்னோக்கி தான் இருக்கும். பின்னோக்கி என் சிந்தனையை விட்டது இல்லை. யாரையும் அழிக்க வேண்டும் என நான் எண்ணியதும் இல்லை. அழிவு பாதை எனக்கு பிடிக்காத ஒன்று. அதை எனக்கு சொல்லிக் கொடுத்தது ஒரு ஆசிரியர்.
ஆசிரியர்கள் நினைத்தால் மாணவர்களை பக்குவப்படுத்த முடியும் அது உங்கள் கையில் தான் உள்ளது. களிமண்ணால் சிலையை வடிக்கலாம். களிமண்ணை வைத்து எதையும் செய்யலாம். எனவே பச்சை மண்ணாய் இருக்கிற இந்தப் பிள்ளைகளை உருவப்படுத்தி அவர்களது ஆற்றலை வெளிக்கொண்டு வருவது என்பது ஆசிரிய பெருமக்களால் மட்டும் தான் முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதி மொழியை அமைச்சர் எ.வ.வேலு வாசிக்க அதை மாணவ-மாணவியர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டா முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, மாவட்ட வருவாய் அதிகாரி பிரியதர்ஷினி, எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்,முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி, நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.