திருவண்ணாமலையில் அரசு சார்பில் நடத்தப்படும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க 13ந் தேதி கடைசி நாளாகும்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் (Sub Inspector ) பணியிடங்களுக்கான போட்டி தேர்வு ஜுன் 2022-ஆம் மாதத்தில் நடைபெற உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண், திருநங்கைகள் இத்தேர்வை எழுதலாம்.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 18.04.2022 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள்¸ புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் வரும் 13.04.2022-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தொலைபேசி எண்ணில் 04175-233381-ல் தொடர்பு கொண்டு தங்களது பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.