திருவண்ணாமலை அருகே சர்ச்சை சாமியார் அன்னபூரணி ஆசிரமம் அமைத்து தரிசன நிகழ்ச்சியை நடத்தினார்.
ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அடுத்தவரின் கணவர் அரசு என்பருடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து எடுத்துரைத்த அன்னபூரணி¸ பிறகு சாமியார் அவதாரமெடுத்தார். தரிசன நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இதையடுத்து தனி மனித ஒழுக்கம் இல்லாதவர் தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டு மத நம்பிக்கைகளை இழிவு படுததும் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மையில் அன்னபூரணியுடன் ஒன்றாக தோன்றிய அரசு திடீரென இறந்து விட்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரது சிலையை சென்னை அருகே உள்ள தனது இடத்தல் அன்னபூரணி நிறுவியதும்¸ அதை அவரது ஆண் நண்பர் அகற்றியதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் அவரது தரிசன நிகழ்ச்சி¸ ஏப்ரல் 3ந் தேதி (இன்று) சென்னை நைனார்குப்பத்தில் உள்ள சுத்தானந்த ஆசிரமத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால அந்த இடத்தில் தரிசன நிகழ்ச்சி நடக்காது என திடீரென அறிவிப்பு வெளியானது.
எல்லா சமூக வலைத்தளங்களிலும் தவறான வதந்தியை பரப்ப விட்டு என்னுடைய ஆன்மீக நிகழ்ச்சி நடக்க இருந்த ஆசிரமத்திற்கு அழுத்தம் கொடுத்து நிகழ்ச்சியை அங்கு நடத்தக் கூடாது என நிர்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதனால் இடத்தை மாற்றி உள்ளோம். கடந்த காலம்¸ வரும் காலம் என சொல்லாமல் நிகழ்காலத்தில் எப்படி வாழ வேண்டும் என வாழ கற்றுக் கொடுத்து வருகிறேன். என் வேலை அருள்வாக்கு சொல்வதில்லை¸ பல வருடம் தியானம் செய்தாலும் கிடைக்காத ஆன்மீக அனுபவங்களை என்னுடைய தெய்வ சக்தியால் அத்தனை ஆன்மீக அனுபவங்களையும் கொடுத்து¸ உடல் ஆரோக்கியம்¸ அமைதி¸ ஆனந்தத்தில் நிலைபெற வைத்து ஒவ்வொருத்தரையும் ஜீவன் முக்தியில் நிலை பெற வைத்திருக்கிறேன்.
எல்லா ஆன்மீக குருமார்களும் நடத்துகிற நிகழ்ச்சியைத்தான் நானும் நடத்துகிறேன். என்னை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்? என்னுடைய ஆன்மீக பணியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது¸ யாருக்காகவும் நிற்காது என அன்னபூரணி விளக்கமளித்திருந்தார்.
அவர் சொல்லியது போல் இந்த தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆன்மீக பூமியான திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பென்னாத்தூர் ராஜா தோப்பு பகுதியில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை
இடையில் பேட்டி அளித்த அன்னபூரணி அரசு அம்மா கூறியதாவது¸
என்னுடைய பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் என் நிகழ்ச்சியை நடத்திட கல்யாண மண்டபத்தை தேடி அலைவார்கள் இது ஒரு பெரிய வேலையாக இருந்தது. அந்த வேலையை மிச்சம் செய்து கொடுத்த மீடியா சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு(திருவண்ணாமலை) சொந்தமாக ஒரு இடம் வாங்கி உட்கார வைத்து விட்டீர்கள். நான் அருள்வாக்கு சொல்வதில்லை. ஆன்மீகத்தைத்தான் சொல்லி கொடுத்து வருகிறேன். சென்னை¸ திருவண்ணாமலை¸ காஞ்சீபுரம் ஆகிய ஊர்களில் என்னுடைய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.
திருவண்ணாமலை மட்டும் ஆன்மீக பூமி அல்ல. இந்த பிரபஞ்சமே ஆன்மீக பூமிதான். ஆன்மீகம் இல்லாத இடமே இல்லை. இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்தது ஏன் என்றால் என்னுடைய பட்ஜெட்டுக்கு இங்குதான் இடம் வாங்க முடிந்தது. அதுதான் காரணம். வேறு ஏதுமில்லை. நான் நடத்தும் நிகழ்ச்சிகளை நேரில் வந்து பார்க்காமல் என்னை பற்றி குற்றச்சாட்டு சொல்லக்கூடாது.
வெளிவேஷம் தான் ஆன்மீகம் என்ற மனமயக்கத்தை கொடுத்து உள்ளனர். மக்கள் எல்லோரும் என்னை நோக்கி திரும்பி விடுவார்களோ¸ நம்மிடம் இருப்பவர்கள் அவங்ககிட்ட (அன்னபூரணி) போய் விடுவார்களோ என ஒரு பயம். அந்த பயத்தால்தான் என்மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. அரசு(2வது கணவர்) சிலை எங்கே என கேட்கிறீர்கள். அது இங்கேதான்(ஆசிரமத்தில்) உள்ளது. நாங்கள் 2 பேரும் இல்லாமல் ஆன்மீகமே இல்லை. அளவே இல்லாத அளவிற்கு வதந்தி பரப்பப்பட்டுள்ளது. என்னை அழிக்க முடியாது. என்னை அழிக்க நினைக்கிற ஒவ்வொரு அடியும் என்னுடைய வளர்ச்சிக்கான அடி.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரமம் அமைக்க 1 ஏக்கர் நிலத்தை ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரிடம் அன்னபூரணி கடநத 15 தினங்களுக்கு முன்பு விலைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சர்ச்சை சாமியார் திருவண்ணாமலை அருகே ஆசிரமம் அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.