திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் உள்ள பைரவர் சன்னதியில் பூசணியில் தீபம் ஏற்றி பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் வீற்றிருக்கும் காலபைரவருக்கு நேற்று இரவு தேய்பிறை அஷ்டமியை யொட்டி அபிஷேக அலங்கார தீபாராதனை மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
பவுர்ணமியை அடுத்து எட்டாவது நாள் அன்று வரும் அஷ்டமி திதியில் மகா கால பைரவரை வணங்குவது மிகவும் விசேஷமாகும். இதனால் நேற்று மாலை முதலே அண்ணாமலையார் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பச்சரிசி மாவு¸ அபிஷேக பொடி¸ மஞ்சள்¸ பால்¸ தயிர்¸ இளநீர்¸ விபூதி¸ சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து முந்திரி மாலை மற்றும் வடைமாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஸ்ரீ மகா கால பைரவருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் காலபைரவரை வணங்கினர்.
துர்சக்திகள் விலகவும்¸ எதிரிகளிடமிருந்து வரும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பூசணிக்காயில் தீபம் ஏற்றப்படுவது நன்மை பயக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஒரு பூசணிக்காயை இரண்டாக அறுத்து ஒரு பாதியில் மஞ்சளும் மற்றுமொரு பாதியில் குங்குமம் தடவி இலுப்பை எண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு அதில் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஒரு சிலர் தேங்காய் மூடியில் தேங்காய் எண்ணெய் விட்டு சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றினர். திருவண்ணாமலை நகரமன்றத் தலைவரின் கணவரும்¸ நகர தி.மு.க செயலாளருமான கார்த்தி வேல்மாறனும் பூசணி தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.
காலபைரவர் அபிஷேகத்தில் வைத்த ரட்சை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.