திருவண்ணாமலை அருகே வீட்டில் பள்ளி மாணவி இறந்து கிடந்தார். காட்டில் அவரது தந்தை காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இந்த மர்ம மரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் டி.சிவபாலன்(வயது 40). இவர் சே.கூடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சிவபாலனுக்கு திருமணமாகி ரம்பா என்ற மனைவியும்¸ ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனது செல்போனை விட்டு விட்டு சிவபாலன் வெளியே சென்று விட்டார். அப்போது வீட்டில் அவரது மகள் தேவி பிரியா(17) மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேவி பிரியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை-மணலூர் பேட்டை செல்லும் ரோட்டில் உள்ள காட்டில் சிவபாலன்¸ கை மற்றும் கால்¸ முகங்களில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவி பிரியாவும்¸ சிவபாலனும் எப்படி இறந்தனர் என்பது மர்மமாக உள்ளது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தேவி பிரியா¸ திருவண்ணாமலை-வேட்டவலம் ரிங் ரோட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் படு சுட்டியான தேவிபிரியா 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவராவார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான சிவபாலன்¸ திருவண்ணாமலை அடுத்த பழையனூர் பள்ளியில் பணிபுரிந்த போது வேலையாம்பாக்கத்தைச் சேர்ந்த ரம்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.
தேவி பிரியா இறந்தது குறித்து தண்டராம்பட்டு போலீசாரும்¸ சிவபாலன் இறந்தது குறித்து தச்சம்பட்டு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகளும்¸ தந்தையும் அடுத்தடுத்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.