பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களித்துள்ளனர். செங்கத்தில் பாமவிற்கு துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் திமுக சார்பில் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். அதன்படி திருவண்ணாமலை நகராட்சியில் நிர்மலா வேல்மாறன்¸ துணைத் தலைவராக சு.ராஜாங்கமும்¸ ஆரணியில் ஏ.சி.மணி¸ செய்யாறில் விஸ்வநாதன்¸ வந்தவாசியில் ஜலால் ஆகியோரும் செங்கம் பேரூராட்சியில் சாதிக்பாஷா¸ களம்பூரில் பழனி¸ சேத்துப்பட்டில் சுதா முருகன்¸ போளுரில் ராணி சண்முகம் பெரணமல்லூரியில் வேணிஏழுமலை¸ தேசூரில் ராதா ஜெகவீரபாண்டியன் கண்ணமங்கலத்தில் மகாலட்சுமி கோவர்தனன்¸ வேட்டவலத்தில் கௌரி நடராஜன் கீழ்பென்னாத்தூரில் சரவணன்¸ புதுப்பாளையத்தில் செல்வபாரதி மனோஜ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறனுக்கு 25வது வார்டில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் திமுக வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி திடீரென ஆதரவு அளித்து வாக்களித்தார். இதனால் நிர்மலா கார்த்தி வேல்மாறனுக்கு கூடுதலாக 1 ஓட்டுடன் 32 வாக்குகள் கிடைத்தது. இவரை எதிர்த்து அதிமுக சார்பில் அல்லி டிஸ்கோ குணசேகரன் போட்டியிட்டு 6 வாக்குகளை பெற்றார்.
நகரமன்ற துணைத் தலைவர் தேர்தலில் சு.ராஜாங்கம் போட்டியிட்டார். அவருக்கு திமுகவினர் 31 பேரும், சுயேட்சை உறுப்பினர்கள் ஸ்ரீதேவிபழனி, சி.பாப்பாத்தி(35வது வார்டில் வெற்றி பெற்றவர்) உள்பட 33 பேர் வாக்களித்ததால் அவர் நகரமன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த ச.சாந்தி 6 வாக்குகளை பெற்றார்.
15 வார்டுகளை கொண்ட வேட்டவலம் பேரூராட்சியில் 8 இடங்களில் திமுகவும்¸ 5 இடங்ககளில் அதிமுகவும்¸ 2 இடங்களில் சுயேச்சையும் வெற்றி பெற்றிருந்தன. இன்று நடைபெற்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் கவுரி நடராஜனும், அதிமுக சார்பில் மஞ்சுளா செல்வமணியும் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கவுரி 11 வாக்குகளை பெற்றார். 2 சுயேட்சைகள் மட்டுமன்றி அதிமுக ஓட்டும் சேர்த்து அவருக்கு கிடைத்துள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட மஞ்சுளாவுக்கு 4 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மஞ்சுளாவின் கணவர் செல்வமணி வேட்டவலம் நகர அதிமுக செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அதிமுகவின் ஒரு ஓட்டு திமுகவிற்கு கிடைத்தது அவர்களது தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 8 இடங்களில் திமுகவும்¸ 4 இடங்களில் அதிமுகவும்¸ 2 இடங்களில் சுயேச்சையும்¸ ஒரு இடத்தில் விடுதலை சிறுத்தை கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோ.சரவணன் 12 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் எதிர்த்து போட்டியிட்ட மல்லிகா மயில்வாகனனுக்கு 4 ஓட்டுகள் கிடைக்க வேண்டிய நிலையில் 3 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. அதிமுகவின் ஒரு ஓட்டு திமுகவிற்கு கிடைத்துள்ளது.
செங்கம் பேரூராட்சி தேர்தலில் திமுக 8 இடத்திலும்¸ அதன் கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி ஒரு இடத்திலும்¸ அதிமுக 7 இடத்திலும்¸ பாரதிய ஜனதா கட்சி ஒரு வார்டிலும்¸ பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அதிமுகவிற்கு கிடைக்கும் பட்சத்தில் திமுகவும்¸ அதிமுகவும் சம பலத்தோடு இருந்திருக்கும். இந்நிலையில் பாமக கவுன்சிலர் அருள்ஜோதியை திமுகவினர் கடத்திச் சென்று விட்டதாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு;பட்டனர். இதையடுத்து கடத்திச் செல்லப்பட்ட அருள்ஜோதி விடுவிக்கப்பட்டார்.
திமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் தலைவர் பதவியை பிடிக்க பாமகவின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் அருள்ஜோதியை சரிகட்டிய திமுக அவருக்கு துணைத் தலைவர் பதவியை தர முன்வந்தது. இதையடுத்து அவர் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் சாதிக்பாஷா வெற்றி பெற்றார். மாலையில் அருள்ஜோதி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செய்யாறு நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக தலைமை விஸ்வநாதனை அறிவித்திருந்தது. ஆனால் இன்று நடைபெற்ற தேர்தலில் அவரை எதிர்த்து திமுக நகர செயலாளர் மோகனவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விஸ்வநாதனுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் ஒரு லாரியில் ஏற்றப்பட்டு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஊர்வலம் வந்தனர். அப்போது நகரமன்ற தலைவர் நிர்மலாவும்¸ துணைத்தலைவர் ராஜாங்கமும் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.