திருவண்ணாமலை வேங்கிக்காலில் கலெக்டர் வருகைக்காக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட வந்திருந்த பொதுமக்கள் 3 மணி நேரம் காத்திருந்தனர்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்திய நாட்டிலிருந்து அறவே ஒழிக்கும் பொருட்டு 1995 முதல் கடந்த 27 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு கடைசியாக 31.01.2021 அன்று நடைபெற்றது. தற்போது 28-வது ஆண்டாக இம்முகாம் இன்று 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2¸23¸474 பேர் உள்ளனர். இவர்களுக்கு சொட்டு மருந்து போட 2¸048 முகாம்கள் அமைக்கப்பட்டு 8¸055 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விடுபட்ட குழந்தைகளுக்கு மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு¸ வீடாகச் சென்று சொட்டு மருந்து அளிக்கவும்¸ ரயில் நிலையம்¸ பேருந்து நிலையம்¸ திரையரங்குகள்¸ தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் ‘நடமாடும் முகாம்” மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்கால் துணை சுகாதார நிலையம் அருகே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது.
அங்கு காலை முதலே பெற்றோர்கள் கைக்குழந்தைகளுடன் வரத் தொடங்கினர். காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய முகாம் 9 மணியாகியும் தொடங்கவில்லை. காத்திருந்து வெறுத்து போன பெற்றோர்கள் பலர் வீட்டுக்கு சென்று விட்டனர். சிலர் அதிகாரிகளிடம் ஏன் எங்களை உட்கார வைத்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டனர். கலெக்டர் வந்து துவக்கி வைத்ததும் சொட்டு மருந்து போடப்படும் என அதிகாரிகள் பதிலளித்தனர்.
ஒரு வழியாக மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் காலை 10 மணிக்கு வந்து குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
இது பற்றி விசாரித்ததில் கலெக்டர் முகாமை பார்வையிடத்தான் வருகிறார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுகாதாரதுறையினர் முகாமை துவக்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டு விட்டது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் குளறுபடியால் பெற்றோர்கள் கைக்குழந்தைகளுடன் 3 மணி நேரம் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குநர் செல்வகுமார்¸ உதவி இயக்குநர் சுகாதாரப்பணிகள் சுரேஷ் குமார்¸ உதவி திட்ட மேலாளர் விஜயரமனன்¸ வட்டார மருத்துவ அலுவலர் புவனேஷ்வரி¸ ரோட்டிரி கிளப் ஆஃப் லைட்ஸ் சிட்டி அணிரிட்டா¸ வேங்கிக்கால் ரோட்டரி சங்கத் தலைவர் வழக்கறிஞர் ரொசாரியோ மற்றும் செவிலியர்கள்¸ அரசு அலுவலர்கள்¸ தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.