திருவண்ணாமலை 25வது வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்திட திமுகவுடன் சேர்ந்து அதிமுக¸ பாஜக கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றிதால் ஆத்திரம் அடைந்த தி.மு.கவினர் என்கவுண்டர் ஸ்பெஷலிஷ்ட் வெள்ளத்துரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி 25வது வார்டில் சமுத்திரம் ஏரிக்கரை பகுதி சந்தைமேடு¸ பெரும்பாக்கம் ரோடு¸ ராஜீவ்காந்தி நகர்¸ அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு¸ ரமணா நகர்¸ அக்னிலிங்கம் குறுக்குத் தெரு போன்ற பகுதிகள் அமைந்திருக்கின்றன. மொத்தம் 1590 வாக்காளர்கள் உள்ளனர்.
நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் இந்த வார்டில் தி.மு.க சார்பில் க.முனியம்மாளும்¸ அ.தி.மு.க சார்பில் ஏ.மணிமேகலையும்¸ பா.ஜ.க சார்பில் ஆ.சுகந்தியும் போட்டியிட்டனர். சுயேச்சை வேட்பாளராக அந்த வார்டில் நன்கு பரிட்சயம் ஆன ஸ்ரீதேவிபழனி தென்னை மரச்சின்னத்தில் போட்டியிட்டார். இவரது கணவர் பழனி தி.மு.கவைச் சேர்ந்தவர். இவர் வார்டில் உள்ள மக்களுக்கும்¸ கூலித் தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து நல்ல பெயர் எடுத்தவர். கொரோனா ஊரடங்கின் போது பல லட்சம் ரூபாய் செலவில் வார்டில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்.
25வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட இவர் விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக தலைமை, வார்டில் பாப்புலர் இல்லாத நபருக்கு சீட் வழங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி¸ பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு என்பதால் தனது மனைவியை சுயேட்சையாக போட்டியிட வைத்தார். வார்டு மக்களின் விருப்பத்தை ஏற்று சுயேட்சையாக களமிறக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரச்சாரத்தில் திமுக வேட்பாளருக்கு கடும் நெருக்கடியை தந்தார். கவனிப்பிலும் திமுகவை முந்தினார். அதே சமயம் அதிமுக வேட்பாளர் அமைதியாகி விட பாஜக வேட்பாளரோ நாங்களும் இருக்கிறோம் என அதிரடி காட்டினார்.
இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. 25வது வார்டின் வாக்குப்பதிவு மையம் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர். தென்னை மரத்திற்கு அதிக ஆதரவு காணப்பட்டதாக கூறப்படுகிறது. பகல் 12 மணி அளவில் 25 வது வார்டில்; 50 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் திமுக¸ அதிமுக¸ பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜெண்டுகள் ஒன்று சேர்ந்து வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 12 மணி அளவில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களை வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் திமுகவினர் வெள்ளத்துரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதற்கும் அசராத வெள்ளைத்துரை¸ தேர்தல் விதிமுறையின்படி 100 அடி தள்ளி நில்லுங்கள் என அவர்களை எச்சரித்தார்.
இதையடுத்து திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் மணிமேகலை¸ பாஜக வேட்பாளரின் கணவர் ஆனந்தன் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டனர். இதைப்பார்த்த பொதுமக்கள் ஒரு சுயேட்சை வேட்பாளரை எதிர்த்து ஆளும் கட்சியினர்¸ எதிர்கட்சிகளை சேர்த்து போராட்டம் நடத்தியது இந்த தேர்தலாகத்தான் இருக்கும் என பேசிக் கொண்டனர். போலீசை கண்டித்து ஆளும் கட்சியே போராட்டம் நடத்தலாமா என தலைமையிடமிருந்து டோஸ் விழுந்ததால் திமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா நேரில் வந்து விசாரணை நடத்தினார். வாக்குப்பதிவு மையத்தில் திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினரை வெளியேற்ற உத்தரவிட்டார். பிறகு வாக்குப்பதிவை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டு அங்கேயே உட்கார்ந்து வாக்குப்பதிவை கவனித்தார்.
இந்நிலையில் திமுக¸அதிமுக¸ பாஜக வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் சேர்ந்து 25வது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கும் கையெழுத்திட அவர்களின் முகவர்கள் மறுத்து விட்டனர். எனவே 25வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்ற பேச்சு நிலவி வருகிறது.