திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடுமுறை தின கட்டணம் என ரூ.1000 வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆடி18 எதை செய்தாலும் பெருகும் என்பதால் ஆடி 18 நாளான இன்று புது துணி மற்றும் நகை வாங்க திருவண்ணாமலை பஜாரில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் புதிய தொழில் தொடங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கும், புதிய வீடு, மனை, நிலம் வாங்கவும், விற்கவும் பத்திரப்பதிவு செய்வதற்கும் திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகம் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆண்களும், பெண்களும் இன்று அதிக அளவில் வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று விடுமுறை தினம், எனவே பத்திரப்பதிவு செய்ய கூடுதலாக ரூ.1000 கட்ட வேண்டும் என பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூறியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நல்ல நேரம் போய் விடுமே என சிலர் கேள்வி கேட்காமல் 1000 ரூபாயை கூடுதலாக செலுத்தி பத்திரங்களை பதிவு செய்து விட்டு சென்றனர். கஷ்டப்பட்டு காசு சேர்த்து ஒரு இடம் வாங்கலாம் என்று வந்தால் இப்படி கூடுதலாக பணம் வாங்குகிறார்களே என கிராம மக்கள் புலம்பித் தள்ளினர். இது பற்றி பதிவுத் துறை அலுவலரிடம் சிலர் கேட்டபோது ஆடி 18 விடுமுறை தினத்தன்று கூடுதல் கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இன்று நமது மாவட்டத்திற்கு விடுமுறை ஏதும் அறிவிக்கவிக்காத நிலையில் கூடுதல் கட்டணம் ஏன் வசூலிக்கிறீர்கள்? கூடுதல் கட்டணம் குறித்து ஏன் அறிவிப்பு செய்யவில்லை? அறிவிப்பு பலகையில் ஏன் நோட்டீஸ் ஒட்டவில்லை? எனவும் கேள்விக்கணைகளை எழுப்பினர். பிறகு பத்திரப்பதிவுத்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். அங்கிருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என உத்தரவு வரவே விடுமுறை தின கட்டணம் ரூ. 1000 இன்றி பத்திரப்பதிவுகள் நடைபெற்றன. ஏற்கனவே வசூலிக்கப்படுபவர்களுக்கு பணத்தை திருப்பித் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அலுவலர்களிடம் விசாரித்ததில் சித்திரை திருநாள், தைப்பூசம், ஆடிப்பெருக்கு போன்ற மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அதிமுக ஆட்சியின்போது பதிவுத்துறை தலைவருக்கு முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும் விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று மட்டும் பத்திர பதிவு செய்ய ரூ.1000 வசூலிக்க உத்தரவிடப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது. இது மட்டுமன்றி அந்தந்த மாவட்டங்களில் உள்ளுர் விடுமுறை விடப்பட்டால் அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஆடிப்பெருக்கான இன்று தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. உள்ளுர் விடுமுறை அறிவிக்காத திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்திருக்க கூடாது என தெரிவித்தனர்.