
அருணை ஆனந்தன்
தி.மு.க வேட்பாளர் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய கோரிய பா.ஜ.க வேட்பாளர் திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 4 நகராட்சிகளிலும் மற்றும் 10 பேரூராட்சிகளிலும் வருகிற 19ந்தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் சென்ற 4ந் தேதியோடு முடிவடைந்தது. 5ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று மனுக்களை வாபஸ் பெறுவது நடைபெற்றது.
ஆரணி நகராட்சியில் 65 பேர் வாபஸ் பெற்றதால் இறுதியாக 130 பேரும்¸ திருவண்ணாமலை நகராட்சியில் 43 பேர் வாபஸ் பெற்றதால் இறுதியாக 271 பேரும்¸ செய்யாறில் 26 பேர் வாபஸ் பெற்றதால் இறுதியாக 133 பேரும்¸ வந்தவாசியில் 30 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால் இறுதியாக 117 பேரும் களத்தில் உள்ளனர்.
பேரூராட்சிகளில் வாபஸ் பெற்றவர்கள்
செங்கம்-23¸ சேத்துப்பட்டு-25¸ தேசூர்-14¸ களம்பூர்-12¸ கண்ணமங்கலம்-29¸ கீழ்பென்னாத்தூர்-16¸ பெரணமல்லூர்-4¸ போளுர்-31¸ புதுப்பாளையம்-23¸ வேட்டவலம்-6
போட்டியின்றி தேர்வு
போளுர் பேரூராட்சியில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நகராட்சி¸ பேரூராட்சிகளில் 347 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இறுதியாக 1214 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
திருவண்ணாமலை நகராட்சியில் 26வது வார்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் அருணை ஆனந்தனும்¸ 25வது வார்டில் அவரது மனைவி சுகந்தியும் போட்டியிடுவார்கள் என தலைமை அறிவித்திருந்தது. அதன்படி 2 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 26வது வார்டு தி.மு.க வேட்பாளர் பிரகாஷின் பெயர் 2 வார்டுகளில் இருப்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்யும்படி பா.ஜ.க வேட்பாளர் அருணை ஆனந்தன் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருந்தார். இன்னொரு வார்டில் உள்ள தனது பெயரை நீக்கம் செய்ய முறையாக விண்ணப்பித்து விட்டதாக தி.மு.க வேட்பாளர் பிரகாஷ் தெரிவிக்கவே அவரது மனு ஏற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீரென தனது வேட்பு மனுவை அருணை ஆனந்தன் வாபஸ் பெற்றதால் பா.ஜ.க தலைமை அதிர்ச்சி அடைந்தது. தனது மனைவியின் வெற்றியில் கவனம் செலுத்துவதற்காக வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக அருணை ஆனந்தன் தலைமையிடம் விளக்கம் அளித்தார். இதையடுத்து மாற்று வேட்பாளரான அருள் என்பவரை 26வது வார்டு வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது.
தி.மு.க வேட்பாளர் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய கோரிய பா.ஜ.க வேட்பாளர் திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.