Homeசெய்திகள்சமாதானம் செய்ய வீரளுர் கிராமத்திற்கு சென்றார் எ.வ.வேலு

சமாதானம் செய்ய வீரளுர் கிராமத்திற்கு சென்றார் எ.வ.வேலு

சமாதானம் செய்ய வீரளுர் கிராமத்திற்கு சென்றார் எ.வ.வேலு

இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சமாதானம் செய்ய அமைச்சர் எ.வ.வேலு வீரளுர் கிராமத்திற்கு சென்றார். 

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி இறந்துபோன தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஊர் பொது பாதையில் கொண்டு செல்வது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வந்த தெருக்கள் மீது மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் காயமடைந்தனர்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 250க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க அந்த கிராமமே போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. மனித உரிமை ஆணையர்¸ தேசிய தாழ்த்தப்பட்டோர் துணைத் தலைவர் ஆகியோர் வீரளுருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் நிதி வழங்கும் நிகழ்ச்சி கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிதி பெற யாரும் வராததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் வீரளுருக்கு நேரில் சென்று 41 குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்தை வழங்கினார். 

இதைதொடர்ந்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய வீரளுர் கிராமத்திற்கு சென்றார். முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு வீடு வீடாக சென்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது தருமன் அய்யாக்கண்ணு என்பவர் எம்.எல்.ஏ¸ ஒன்றிய செயலாளர் யாரும் வந்து எங்களை ஏதும் கேட்கவில்லை என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் டென்ஷனான நேரத்தில் அரசியல்வாதிகள் யாரும் போக கூடாது என போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றார். முருகன் என்பவரது மனைவி கோமதி கையில் எலும்பு முறிந்து கையில் கட்டு போட்டிருப்பதை பார்த்த அமைச்சர் அவருக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குடிசை வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு உடனடியாக வீடு வழங்க உத்தரவிட்டார். மேலும் பிறந்து 15நாளே ஆன அவர்களின் குழந்தையை கையில் வாங்கி ஏந்தியபடி அவர்களிடம் பேசினார். அந்த குழந்தைக்கு தனது சொந்த பணத்தை பரிசாக வழங்கினார். 

சமாதானம் செய்ய வீரளுர் கிராமத்திற்கு சென்றார் எ.வ.வேலு
சமாதானம் செய்ய வீரளுர் கிராமத்திற்கு சென்றார் எ.வ.வேலு

பிறகு மக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது ஒரு இளைஞர் இத்தனை நாட்களாக ஏன் வரவில்லை? எங்கே போயிருந்தீர்கள் என ஆவேசமாக கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் அடக்கினர். அதன் பிறகு அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு¸ விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றிருப்பது வருத்தத்துக்குரியது. நமது மாவட்டத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது இல்லை. பொது வழி அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அனைவருக்கும் சாலை என்பது சொந்தமானது. முதலில் இந்த தகவல் தெரிந்த உடன் காவல்துறை பாதுகாப்போடு சடலத்தை பொது வழியில் எடுத்துச் செல்ல உத்தரவிட்டது நான்தான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளித்து தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டதும் அரசாங்கம்தான். குறைகளை கேட்டபோது இவர்களுக்கு உடனே மருத்துவ உதவி தேவை என்பது தெரிந்தது. எனவே நாளை மருத்துவ குழுவினரை இங்கு அனுப்பி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். 

அருந்ததியின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு 3.5 சதவீதம் கலைஞர் கொடுத்த காரணத்தில்தான் இன்றைக்கு டாக்டராக¸ என்ஜீனியராக உள்ளனர். திராவிட இயக்கத்தில் இருக்கிற நாங்கள் எப்போதும் ஜாதி பார்க்க மாட்டோம். எங்களுக்கு ஒரே ஜாதி ஆண் ஜாதி¸ பெண் ஜாதிதான். ஜாதி¸ சமயமற்ற அரசியலை அமைப்போம் என்பதுதான் எங்களுடைய கொள்கை. இங்கு சுமூகமான சூழ்நிலை உருவாக இருக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசாங்கம் விடாது. அவர்களை அடையாளம் கண்டு அரசு நடவடிக்கை எடுக்கும். என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருத்தர் நடவடிக்கை எடுக்கவில்லையே என்றார். நடவடிக்கை எடுக்காமல் எப்படி 25 பேர் உள்ளே(சிறையில்) இருக்கிறார்கள் என அமைச்சர் அவருக்கு பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் இந்த சம்பவத்தில் எவனோ முன்னால் போன 10 பேர் பண்ணதற்காக அங்கேயும்(ஊர்; மக்கள்) அப்பாவிகள் மாட்டிக் கொண்டு உள்ளனர். இது தவறு என அங்கே இருப்பவர்கள் உணர கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே பழைய சம்பவத்தை ஊதி ஊதி பெருசாக்கினால் பிரச்சனைகள்தான் அதிகமாகும். சமத்துவபுரத்தை தி.மு.க கட்டியதே அனைவரும் ஒன்று¸ ஒரே இடத்தில் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நாம் மனதை மாற்றிக் கொண்டு பழைய நிலைமைக்கு வந்தாக வேண்டும். உங்களுக்கு அரசு உதவியாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஒத்து போக வேண்டும். மேலாரணி பகுதியில் சமத்துவபுரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ரூ.62 லட்சத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். என்றார். 

இதைத் தொடர்ந்து ஊர் மக்கள் மத்தியில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். வீரளுரில் நடக்க கூடாத சம்பவம் நடந்திருப்பதால் இந்த மாவட்டமே தலைகுனிந்து நிற்கிறது. இன்றைக்கு உலகம் நவீனமாக மாறிக் கொண்டே இருக்கிறது. அதை புரியாத சில பேர் இருப்பதால்தான் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கிறது. அருந்ததி காலனி இங்கே புதியதாக வந்துவிடவில்லை. எந்த ஊரில் காலனி இல்லாமல் இருக்கிறது? நமக்கு எப்படி ஊர் சொந்தமோ அதே போல் அவர்களுக்கும் சொந்தம் உண்டு. இங்கு நடைபெற்ற சம்பவத்தை நியாயப்படுத்தலாமா? இதில் நிறைய பேர் அப்பாவிகளும் உள்ளனர். சமத்துவபுரத்தில் உள்ள எல்லா இன மக்களும் ஒற்றுமையாக உள்ளனர். 100வருடத்திற்கு முன் ஜாதி என்ற பெயரில் அப்படி¸ இப்படி என சொல்லி ஒரு மாதிரி ஆக்கி விட்டதால்தான் அதில் ஊறி போய் கோபம் வருகிறது. வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாதை எல்லோருக்கும் பொதுவானதாகதான் இருக்க முடியும் என்றார். அப்போது சில பெண்கள் அவரிடம் ஏதோ கேட்க முயன்றனர். இதனால் கோபம் அடைந்த அமைச்சர் இரும்மா¸ இப்படித்தான் 4 பேர் பேசி ஊரை கெடுத்து இருக்கிறீர்கள். இந்த மாவட்டத்தில் ஏன் பிறந்தேன் என அசிங்கப்படுகிறேன் என பதிலளித்தார். 

சமாதானம் செய்ய வீரளுர் கிராமத்திற்கு சென்றார் எ.வ.வேலு

தொடர்ந்து பேசிய அமைச்சர் அவர்கள் வந்து அடித்திருந்தால் கொதித்து போய் இருக்க மாட்டோமா? நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோர்ட்டு¸ வழக்கறிஞர் என செலவு செய்தால் குடும்பம் உருப்பட முடியுமா? மீண்டும் பழைய நிலைமை வந்தால்தான் காவல்துறை வெளியே போகும். அரசாங்கம் ஒரு பக்கமாக இருக்காது. அரசு என்பது பொது. எனவே சுமூகமான சூழ்நிலை ஏற்பட அரசு சார்பில் 10 தினங்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்றார். 

அவர்களுக்கு பாதை இருக்கிற போது அராஜகம் செய்வதே அவர்கள்தான். 10 வருடம் அவர்கள் ஊராட்சி தலைவர் பதவியில் இருந்தனர். ஏன் அவர்களுக்கான மயான பாதையை செப்பனிடவில்லை? அவர்களே வண்டியை உடைத்துக் கொண்டு நஷ்ட ஈடு கேட்கின்றனர். குழந்தைக்கு அம்மை போட்டுள்ள நிலையில் சவத்தை எடுத்து வந்து மேளம் அடித்து அராஜகம் செய்கின்றனர்¸ எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குங்கள் என ஊர் மக்கள் தங்களது கருத்துக்களை அமைச்சரிடம் தெரிவித்தனர். அப்போது ஊர் மக்கள் சிலர் ஒன்றாக எழுந்து பேசவே கூச்சல்¸ குழப்பம் ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என அமைச்சர் அவர்களுக்கு பதிலளித்தார். 

அமைச்சருடன் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்¸ சி.என்.அண்ணாதுரை எம்பி¸ பெ.சு.தி.சரவணன் எமஎல்ஏ¸ திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன்¸ கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜகேரன்¸ திமுக ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் வழக்கறிஞர் சுப்பிரமணியன் மற்றும் பலர் சென்றிருந்தனர். 

See also  தி.மலை-திருச்சிக்கு தியாகதுருகம் வழியாக இரு வழிச்சாலை

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!