திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலத்தில் அக்னி குண்டத்தை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்ததை கண்டித்து பா.ம.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ளது நாயுடுமங்கலம் கூட் ரோடு. இங்கு சாலை ஓரமாக வன்னியர் சங்கத்தினர் தங்களது சின்னமான அக்னிகுண்டம் வைத்திருந்தனர். இந்த அக்னி குண்டத்தை 21-12-1989ம் ஆண்டு அப்போதைய ஒன்றியத் தலைவர் ஜெயராம நாயக்கர் தலைமையில்¸ மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையில்¸ மாவட்ட செயலாளர் பாபு கவுண்டர் வரவேற்புரையில் டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்காகவும்¸ பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்பதற்காகவும் பொதுமக்களின் நலன் கருதி அந்த அக்னி குண்டத்தை வேறு இடத்துக்கு மாற்றி கொள்ளும் பொருட்டு தற்காலிகமாக அகற்றிக் கொள்ளப்பட்டது.
பஸ் நிலைய திறப்பு¸ சாலை விரிவாக்கம் ஆகிய பணிகள் முடிந்தும் அந்த அக்னி குண்டம் மீண்டும் நிறுவப்படாமல் இருந்தது. பா.ம.க புதிய மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் அக்னி குண்டத்தை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அதிகாரிகள் ஒதுக்கித் தந்த பஸ் நிலையம் பக்கத்தில் உள்ள இடத்தில் அந்த அக்னி குண்டம் நேற்று கிரேன் மூலம் நிறுவப்பட்டது. இந்நிலையில் அந்த அக்னி குண்டத்தை அகற்றவில்லையென்றால் எங்கள் தலைவர்களின் சிலைகளை வைப்பபோம் என சில கட்சிகளிடமிருந்து புகார் வந்ததையடுத்து அந்த அக்னி குண்டத்தை அகற்றும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீசாரின் துணையுடன் அக்னி குண்டத்தை அகற்றுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர்.
இதைக் கேள்விப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பக்தவச்சலம்¸ முன்னாள் மாவட்ட செயலாளர் அ.வெ.பிரசாத் உள்பட 500-க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடன் கோட்டாட்சியர் வெற்றிவேல்¸ கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜகாளீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபடவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகள்¸ கட்சி கொடிகள் உரிய அனுமதியுடன்தான் வைக்கப்பட்டுள்ளதா? என பா.ம.க மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் கேள்வி எழுப்பினார். ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்¸ நாங்களும் அக்னி குண்டத்தை அகற்றி கொள்கிறோம் என தெரிவித்தார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் வெற்றிவேல் உத்தரவிட்டார்.
இதையடுத்து நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்போது அக்னி குண்டத்தையும் அகற்றிக் கொள்வது என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பாமகவினர் நடத்திய 4 மணி நேர போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
நாயுடுமங்கலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட உள்ளதாகவும்¸ அச்சமயத்தில் கட்சி கொடிகளும்¸ சிலைகள் இருந்தால் சிலைகளும் அகற்றப்படும் எனவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதனால் வியாபாரிகளும்¸ அரசியல் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.