திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதை மேம்பாட்டு பணிகள் ரூ.50 கோடியில் துவங்கப்பட உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
சைக்கிள் வழங்கும் விழாவில் மயங்கி விழுந்த மாணவிக்கு உடனே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் காரப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் மூலம் 515 பயனாளிகளுக்கு ரூ.94 இலட்சத்து 28 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் அவர் பேசியதாவது,
தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று பயனளிக்க வேண்டும். தமிழக அரசு மக்களின் தேவைகளை அறிந்து அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம்முடைய மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அத்திட்டம் மிக்பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.
இம்மாவட்டத்தில் பெண் குழந்தைகள் திருமணம், பெண் சிசு கொலை போன்றவற்றை தடுத்திடவும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். பெண் குழந்தை கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனக்கு கீழ் 38 துறைகள் உள்ளது. இவற்றை நான் ஆய்வு செய்ய வேண்டும். இரவு 11 மணி ஆனாலும் கோப்புகள் தேங்காமல் பார்த்து கொள்கிறேன். நடுவில் போன் கால்களுக்கு பதில் அளித்திட வேண்டும். வாட்ஸ் அப்பில் தினமும் 50 மெசேஜ் வருகிறது. முடிந்தவரை பதில் அளிக்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்து அவரவர் தொகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதை மேம்பாட்டுக்காக ரூ.50 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டின், வட்டாட்சியர் முனுசாமி, காரப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி லட்சுமணன், துணைத் தலைவர் வள்ளி கண்ணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாணவி மயக்கம்
முன்னதாக காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 195 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வழங்கினார்.
இன்றைய காலத்தில் மாணவ, மாணவியர்கள் சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதே போல் சமூக வலைதளங்கள் உங்களது கைக்குள் அடங்கியுள்ளது. அதில் பல்வேறு நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. எனவே சரியான முறையில் சமூக ஊடகங்களை மாணாக்கர்களாகிய நீங்கள் கையாள வேண்டும். 10 ஆம் வகுப்புடன் இடைநிற்றலை தவிர்த்து உயர்கல்விக்கு சென்று பல்வேறு பட்டங்களை பெற்று வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வரவேண்டும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அனைத்து நேரங்களிலும் கண்காணித்து உதவிட முடியாது, உங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்களாகவே நல்ல முறையில் கல்வியை பயின்று சமூகத்திற்கு ஒரு முன் வழிகாட்டியாக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என விழாவில் அவர் பேசும் போது தெரிவித்தார்.
விழாவில் கலெக்டர் பேசிக் கொண்டிருந்த போது அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாணவிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கலெக்டர் ஏற்பாடு செய்தார். காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்த மருத்துவ குழுவினர் அங்குள்ள வகுப்பறையில் வைத்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை அளிக்கப்படுவதை கலெக்டர் சென்று பார்வையிட்டார். சிறிது நேரத்தில் அந்த மாணவி இயல்பு நிலைக்கு திரும்பினார்.
காரப்பட்டில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் செல்கின்ற காரணத்தினால் மாணவ-மாணவிகள் தினமும் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு பள்ளிக்கு வருவதால் சோர்வடைந்து விடுகின்றனர். இதன் காரணமாக அந்த மாணவி மயக்கம் ஏற்பட்டதாக சக மாணவிகள் தெரிவித்தனர்.
காரப்பட்டு தரைப்பாலத்தை கடக்க முயற்சித்த போது 4 சைக்கிள்களும், 3 மோட்டார் சைக்கிள்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைந்திட வேண்டும் என மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்ட கலெக்டர் முருகேஷ்சிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
காரப்பட்டில் அடிப்படை வசதிகள் ஏதும் நிறைவேற்றித் தரப்படாமல் உள்ளது. ரோடுகள் சேறும், சகதியுமாக உள்ளது எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.