Homeஆன்மீகம்அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர தீ மிதி விழா

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர தீ மிதி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு ஆடிப்பூரத்தை முன்னிட்டு தீ மிதி விழா நடைபெற்றது. கொட்டும் மழையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவாலயங்களில் எங்கும் நடைபெறாத ஆடிப்பூர தீ மிதி விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே நடத்தப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் சிவபெருமான் எட்டு வடிவங்களுள் ஒன்றாகிய தீவடிவில் எழுந்தருளியிருக்கிறார். ஆடிப்பூரம் 10ம் நாள் இரவில் அம்மன் சன்னதிக்கு முன்னே வளர்க்கும் தீயானது, தீவடிவினராகிய இறைவனைக் குறிக்கிறது. அந்த இறைவனை அன்னை பராசத்தியின் அருளால்தான் அடைய முடியும் என்பதை குறிக்கும் இந்த தீ மிதி விழாவில் அக்னி குண்டத்தில் இறங்கும் உரிமை குலாலர் வகுப்பினருக்கு வழங்கப்படுகிறது.

இப்படி சிறப்பு வாய்ந்த ஆடிப்பூர தீ மிதி விழா அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர தீ மிதி விழா

நேற்று மாலை வளைகாப்பு முடிந்தவுடன் பராசக்தி அம்மன் கொடிமரத்தில் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து ஆடிபிரமோற்சவத்தை யொட்டி அம்மன் சன்னதி முன்பு தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது.  பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்யம் கட்டப்பட்டு மூலிகை மருந்து நெய்வேத்தியமாக சமர்ப்பிக்கப்பட்டு கருவறையில் இருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும், உற்சவமூர்த்தி பராசக்தி அம்மனுக்கும் ஒரே நேரத்தில் தீப ஆராதனை நடைபெற்றது. பராசக்தி அம்மனுக்கு நெய்வேதியமாக படைக்கப்பட்ட மூலிகை மருந்தை கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை இல்லாத பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

See also  கிரிவலப்பாதையில் மற்ற கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை

இரவு அம்மன் சன்னதி எதிரில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு பராசக்தி அம்மன் முன்னிலையில் தீ மிதி விழா நடைபெற்றது. 25 கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்டம் செய்யும் குலாலர் வகுப்பினர் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ ‘உண்ணாமலையம்மனுக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கமிட்டு தீ மிதித்தனர். முன்னதாக பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் கோயில் சிவாச்சாரியார்கள், குலாலர் வம்சத்தினருக்கு பரிவட்டம் கட்டினர். இதைத் தொடர்ந்து அவர்கள் தீக்குண்டத்தில்3 முறை தீ மிதித்தனர். அப்போது மழை பெய்தது. மழையிலும் தீ மிதி விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!