திருவண்ணாமலை கிரிவலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோயிலுக்கு யானை வாங்குவது குறித்து அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலைக்கு வருகை தந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று(17-12-2021) காலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு தாமரை நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க¸ பா.ம.க¸ தி.மு.க கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களை சந்தித்து அவர்களுடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவரிடம் தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களில் முறைகேடு நடப்பதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில் அவர்கள் ஊராட்சிகளில் மத்திய அரசின் சுமார் 90 சதவிகித நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் பாரத பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 60 சதவீத பணிகளையும்¸ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 60 சதவீத பணிகளையும் பஞ்சாயத்து ராஜ் சட்ட விதிகளை மீறி தங்களுக்கு ஒதுக்கக் கோரி அதிகாரிகளின் துணையோடு ஊராட்சி மன்றத் தலைவர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும்¸ இது சம்மந்தமாக துறை அமைச்சர்களை நேரில் சந்திக்க ஊராட்சி மன்ற தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர்களிடம் அண்ணாமலை உறுதி அளித்தார்.
அதன் பிறகு பா.ஜ.க மண்டலத் தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க தயாராக உள்ளது. நாங்கள் இதை ஒரு வாய்ப்பாக பார்க்கிறோம். கட்சி வளர்வதற்கு உள்ளாட்சி பிரதிநிதி என்பது ஒரு அங்கம். நல்ல தலைவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. மக்கள் பணி 24 மணி நேரமும் செய்வோம்¸ லஞ்ச¸ லாவண்யம் இன்றி பணியாற்றுவோம்¸ கமிஷன் என்ற பேச்சே இருக்கக் கூடாது. மாடல் பிரதிநிதிகளாக நல்ல தலைவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவோம். மத்திய அரசின் சாதனை எடுத்துக் கூறியும்¸ ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டியும் எங்களுடைய பிரச்சாரம் இருக்கும்.
அதிமுக ஆட்சியில் சாதனைகள் செய்யப்பட்டிருந்தாலும்¸ உள்ளாட்சியில் 80 சதவீத வேலைகள் மத்திய அரசின் திட்டமாகும். எனவே எங்களுக்கு அதுவே போதுமானது.
திருவண்ணாமலையில் உள்ளது பெரிய கோயில்¸ பஞ்ச பூத ஸ்தலம். இரண்டரை வருடமாக யானை இல்லாமல் இக்கோயிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பல சடங்குகள் யானையை மையமாக வைத்துதான் நடக்கிறது. எனவே திருவண்ணாமலை கோயிலுக்கு யானை வழங்கும்படி நானே நேரில் சென்று அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
நான் 2008ல் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று வந்தவன். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முடியவில்லை என்பது என்னை போன்ற லட்சக்கணக்கான பக்தர்களுக்கு துயரமாக அமைந்துள்ளது. தீபத்திருவிழாவில் கலந்து கொண்டேன். போலீசார் தீவிரவாதிகளை சோதனை போடுவது போல் சோதனை செய்தனர். 5 அடுக்கு பாதுகாப்புகளை தாண்டி இறைவனை சந்திக்க விரும்பவில்லை. கொரோனாவும் இல்லை¸ ஓமைக்ரானும் இல்லை. ஆனால் அவ்வளவு அட்டூழியம் செய்தனர். அதை மனது ஏற்காததால்தான் திருவண்ணாமலைக்கு வந்து 5 நிமிடத்தில் சென்னைக்கு சென்று விட்டேன்.
கிரிவலத்திற்கான தடையை நீக்க வேண்டும். சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பார்கள். 14 கிலோ மீட்டர் நடக்கும் மக்கள் முட்டாள்களா? பிரார்த்தனைகள் நிறைவேற வருகின்றனர். போலீசை பயன்படுத்தி கூட்டத்தை ஒழுங்குப்படுத்துங்கள்.
அரசியல் தலையீட்டை தவிர்த்து விட்டால் காவல்துறையின் கம்பீரத்தை பார்க்க முடியும். தமிழக அரசு காவல்துறையை கம்பீரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். முப்படை தளபதி இறந்த போது முதல்வர்¸ அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டார்கள். அரசியலுக்காக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சுமத்தாது. முதல்வர்¸ தலைமை செயலாளர்¸ மாவட்ட அதிகாரிகள்¸ மீட்பு குழுவினர் வேகமாக விபத்து நடந்த இடத்திற்கு சென்று துரிதமாக பணியை செய்தனர். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு 100க்கு 100 மார்க் தரலாம். இந்தியாவிலேயே பெருமை மிகுந்த மாநிலமாக தமிழகம் நடந்து காட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.