ஆ.ராஜாவை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஆ.ராஜாவை கண்டித்து தானிப்பாடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆ.ராஜாவை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சென்னையில் தி.க.தலைவர் வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராஜா, இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன் என்று அவர் பேசிய 40 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இந்துக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. அவரது பேச்சு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிப்பதாக உள்ளது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்திருக்கிறார். மற்றவர்களை திருப்திப்படுத்துவற்காக ஒரு சமூகத்தை ஆ.ராஜா தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். இத்தகைய தலைவர்களின் மனநிலை துரதிர்ஷ்டவசமானது என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜாவை கைது செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணனும் ஆவேசமாக கூறியிருந்தார்.

See also  போளூர் பாலம் விவகாரம்-எ.வ.வேலு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோதல்

இந்நிலையில் ஆ.ராசாவை கண்டித்து திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடியில் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.சரவணன், இந்து பெண்கள் விபச்சாரிகள் என பேசியதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற போது செய்த பதவி பிரமாணத்தை ஆ.ராசா மீறி இருக்கிறார். இந்துக்களின் ஓட்டை பெற்று பதவிக்கு வந்த ஆ.ராஜா, உடனடியாக தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார். இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர். 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆ.ராஜாவை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இதைத் தொடர்ந்து தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் கே.தயாநிதி புகார் ஒன்றை அளித்தார்.

ஒரு பிரிவினரின் (இந்துக்கள்) மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மத ரீதியாக, பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும், அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினமூட்டும் நோக்கத்திலும் ஆ.ராஜாவின் பேச்சு அமைந்திருப்பதால் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153,153(யு),295,295(யு),296,298,499,504,505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் தயாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

See also  9 மாதமாக தள்ளி போன டி.டி.வி தினகரன் மகள் திருமணம்

இதே போல் செங்கம் போலீஸ் நிலையத்தில் பாஜக நகரத் தலைவர் சரவணன் தலைமையில் பாஜவினர் புகார் மனு அளித்தனர். புதுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.