குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க ஆசிரியர் இல்லாததால் பள்ளியை பெற்றோர்கள் பூட்டினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1முதல் 5ம் வகுப்பு வரை 70 மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு கல்வி போதிக்க ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே உள்ளார். அவரது பெயர் நித்தில குமாரி. 18 வருடங்களாக அதே பள்ளியில் பணிபுரிந்து வருகிறாராம். இவரே தலைமை ஆசிரியராகவும் உள்ளார். கடந்த 4 வருடங்களாக இவர் ஒருவர் மட்டும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறாராம். உடல் நிலையின் காரணமாக சமீப காலமாக பாடம் நடத்துவது இல்லை என சொல்லப்படுகிறது. ஒரே ஆசிரியர் மட்டுமே இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாய்ப்பாடே குழந்தைகளுக்கு தெரியவில்லை. அடிப்படை கல்வியைக் கூட கற்றுக் கொள்ள முடியாத அளவு பெயரளவுக்கு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருவதாகவும்¸ தாங்கள் கூலி வேலை செய்வதால் தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை இருப்பதாகவும் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். போதிய வகுப்பறை¸ கழிவறை போன்ற வசதிகள் இல்லை. இந்த குறைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் இன்று(6-12-2021) மேல்கரியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டு பள்ளிக்கு பூட்டும் போட்டனர். தகுதியான ஆசிரியர்களை நியமிக்காத வரை பள்ளியை திறக்க விடமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் வெகுண்டு எழுந்து பள்ளிக்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.