14 பேருக்கு பூமிதான வாரியத்தின் நிலம் தானம்-கலெக்டர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீண்ட காலமாக உழுது விவசாயம் செய்து வந்த நிலங்களை கலெக்டர் முருகேஷ் 14 பேருக்கு தானமாக வழங்கினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பா.முருகேஷ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
இந்த கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் வேளாண்மை துறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம் கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 485 மனுக்கள் பெறப்பட்டது.
பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார், வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்த பூமிதான வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை நீண்டகாலமாக உழுது விவசாயம் செய்து அனுபவித்து வரும் செய்யார் வட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு 2.10.5 ஹெக்டேர் நிலம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு 0.66.0 ஹெக்டேர் நிலம் ஆகியவற்றிற்கு பூமிதான நில விநியோக பத்திரத்தினை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.( ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கருக்கு சமம்)
நிலச்சுவான்தாரர்களிடமிருந்து தானமாக பெறப்பட்ட நிலங்களை ஏழைகளுக்கு வழங்குவதற்காக 1958ம் ஆண்டு துவக்கப்பட்டதுதான் பூமிதான வாரியம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை 20 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் நிலமற்றவர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலையில் 7ஆயிரம் ஏக்கர் நிலங்கள் யாரிடம் உள்ளது என்பதை கண்டறிந்து கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேர்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை யாருக்கும் விற்க முடியாது.
இது தவிர மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை கலெக்டர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 6 லட்சம் குடும்பங்களுக்கு காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் தீக்குளிப்பு முயற்சிகளை தடுப்பதற்காக முதன்முறையாக கலெக்டர் அலுவலக பிரதான வாயிலை தவிர மற்ற வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செல்லும் வழியின் கதவு அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டது. கடுமையான சோதனைகளுக்கு பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான முருகன் மனைவி அபிராமி, தனது 5 வயது மகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தானும், கணவர் முருகனும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், காதலித்து திருமணம் செய்து கொண்ட கொண்டோம் என்றும், கணவர், பெற்றோர் பேச்சை கேட்டு தன்னை துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாகவும், தனக்கு உரிய நியாயம் கிடைக்க தர்ணா போராட்டம் நடத்தியதாக அபிராமி தெரிவித்தார். அவர் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன், கோட்டாட்சியர்கள் வீ.வெற்றிவேல் (திருவண்ணாமலை) தனலட்சுமி (ஆரணி) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.