திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இன்று வருகை தந்த மாடன் சாமியார் பவித்ரா காளிமாதா மூன்று மாதத்தில் பிரளயம் வரும் என கூறி அதிரடித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. சிறுவயதிலே காளி மீது கொண்ட பக்தியால் காளி மாதாவாக மாறினார். முகத்தில் மேக்கப்¸ உடல் முழுக்க நகை¸ மாடர்ன் டிரஸ் இதுதான் அவருடைய ட்ரேட்மார்க்.
தற்போது திண்டுக்கல்லில் தங்கியிருக்கிறார். இவரது பெயரில் அறக்கட்டளை ஒன்று நடந்து வருகிறது. தர்மாச்சாரியா ஸ்ரீபவித்ரா காளிமாதா கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை என்பது அதன் பெயராகும்.
இன்று காலை அவர் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். செங்கம் ரோட்டில் உள்ள காளி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் பிறகு காரிலேயே கிரிவலம் சென்ற வழியில் அடி அண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பிறகு அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று அண்ணாமலையார்¸ உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்து விட்டு வந்த ஸ்ரீபவித்ரா காளிமாதா செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
ஒரு தீய சக்தி உள்ளது. அதை காலில் போட்டு மிதிக்க வேண்டும். காளியால் மட்டும்தான் அதை வதம் செய்ய முடியும். ஈசனை மயக்கி ஆவேசப்படுத்தி வரத்தை வாங்கி விடலாம். துஷ்பிரயோகம் செய்கிறவர்களுக்கு முடிவு கட்ட ஈசன் காளியைத்தான் அனுப்புவார்.
கொரோனா நேரத்தில் டெல்லிக்கு சென்று முதல்வரை சந்தித்தேன்.அதிலிருந்து கொரோனா அங்கு கிடையாது. திருவண்ணாமலை புண்ணிய பூமியில் என்னுடைய பாதத்தை பதித்து உள்ளேன். இன்று முதல் திருவண்ணாமலையில் நடக்கிற அதிசயத்தை பார்ப்பீர்கள். கெட்ட நோய்¸ கெட்ட சக்திகளை ஒழித்து விட்டேன். கெட்டவர்கள் அழிவார்கள்¸ நல்லவர்கள் வாழ்வார்கள்.
தினமும் நடுநிசி நேரம் 12 மணிக்கு நடக்கும் ஈசனுடைய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன். அப்போது காளிமாதா அகோரமாக நிற்பார். ஈசன் என்னுடன் நேரடியாக பேசுவார். தர்மம் செய்திருந்தால் தர்ம அரசி வருவார். அதர்மம் செய்திருந்தால் அதர்மத்தை அழிக்க ஈசன் கண் அசைப்பார்¸ அதனால்தான் வந்திருக்கிறேன். இந்த 3 மாதத்துக்குள் ஒரு பிரளயம் நடக்கும். அது ஈசனுடைய உத்தரவு. முழு கடையடைப்பு நடக்கும். மூன்று நாள் அமைதியாக இருக்கும்.
இவ்வாறு சஸ்பென்ஸ் வைத்து திகிலை கிளப்பி விட்டு சென்றார் ஸ்ரீபவித்ரா காளிமாதா.
காவி உடையுடன் சாமியார்களை பார்த்து பழக்கப்பட்டு விட்ட பக்தர்கள் கோயிலுக்குள் ஏராளமான நகைகளுடன் வந்த மாடர்ன் பெண் சாமியாரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் அருகில் வந்து ஆசிர்வாதம் வாங்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.