பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏவான எதிரொலி மணியன் அக்கட்சியிலிருந்து விலகி 27ந் தேதி தி.மு.கவில் இணைகிறார்.
ஆரம்ப காலத்தில் தி.மு.க மாணவரணியில் இருந்தவர் எதிரொலி மணியன். தி.மு.கவிலிருந்து அரசியல் பயணத்தை துவக்கிய இவர் 1986ல் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கத்தில் ஐக்கியமானார். இவரது சொந்த ஊர் வந்தவாசியை அடுத்த கீழ்வெள்ளியூர் கிராமம் ஆகும். 58 வயதாகும் எதிரொலி மணியன் பி.எஸ்.சி¸ எம்.ஏ.பி.எட்¸ எம்.பில் படித்தவர். பாட்டாளி மக்கள் கட்சியில் ஒன்றிய மாணவரணி செயலாளர்¸ மாவட்ட மாணவரணி செயலாளர்¸ மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்தவர். 1990ல் இவருக்கு டாக்டர் ராமதாஸ் திருமணத்தை நடத்தி வைத்தார். எதிரொலி மணியனின் துணைவியார் மழையூர் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக உள்ளார்.
2006ல் பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ராமதாஸ் இவருக்கு வழங்கினார். இதில் எதிரொலி மணியன் 6688 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.எஸ்.அன்பழகனை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார். 2011ல் போளுர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயசுதாவிடம் 28ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
2014ம் ஆண்டு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் 1லட்சத்து 57 ஆயிரத்து 954 வாக்குகள் பெற்று எதிரொலி மணியன் 3ம் இடத்தை பெற்றார். 2016 தேர்தலில் பா.ம.க தனித்து போட்டியிட்ட போது இவர் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். 2021 தேர்தலில் பா.ம.க¸ அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்தது. போளுர்¸ ஆரணி மற்றும் கீழ்பென்னாத்தூர் இவற்றில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட எதிரொலி மணியன் சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கும்¸ பா.ம.கவில் சீனியரான காளிதாசுக்கும் சீட் வழங்கப்படவில்லை. இருவரும் எ.வ.வேலுவுக்கு நெருக்கம் என்பதால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது.
சீட் வழங்கப்படாததால் இருவரும் ஏமாற்றம் அடைந்தனர். அதே சமயம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த செல்வக்குமாருக்கு சீட் வழங்கப்பட்டதால் உள்ளுர் பகுதி பா.ம.கவினர் அதிருப்தி அடைந்தனர். தி.மு.க மாவட்ட செயலாளர் எ.வ.வேலு ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது எதிரொலி மணியன்¸ காளிதாஸ் போன்றவர்களுக்கு சீட் வழங்காமல் வெளியூரிலிருந்து வேட்பாளர்களை இறக்குமதி செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார். எதிரொலி மணியனும்¸ காளிதாசும் தனது நண்பர்கள் என அடிக்கடி சொல்லும் எ.வ.வேலு அவர்களுக்காக பரிந்து பேசியதும்¸ இதற்கு அவர்கள் பதிலடி தராமல் அமைதியாக இருந்தது குறித்தும் பா.ம.க தலைமைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் கீழ்பென்னாத்தூரில் பா.ம.க சார்பில் போட்டியிட்ட செல்வக்குமாருக்கு மூத்த நிர்வாகிகளிடம் தகுந்த ஒத்துழைப்பு கிடைக்காததால் 26ஆயிரத்து 787 வாக்குகள் வித்தியாசத்தில் பிச்சாண்டியிடம் தோல்வி அடைந்தார். தலைமையிடத்தில் செல்வாக்கு மிக்கவரான செல்வக்குமார் கட்சினர் சிலர் உள்ளடி வேலை பார்த்தை பற்றி ராமதாசிடமும்¸ அன்புமணியிடம் புகார் கூறியிருந்தார். பல்வேறு மாவட்டங்களிலும் வந்த புகார்களை அடுத்து பா.ம.கவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் சீனியர்களை ஓரம் கட்டி விட்டு துடிப்புடன் செயல்படும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில தேர்தல் பிரச்சார குழு செயலாளர் என்ற பதவியில் எதிரொலி மணியன் நியமிக்கப்பட்டிருந்தார். மாநில துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து காளிதாஸ் விடுவிக்கப்பட்டார். அவருக்கு கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படாமல் உள்ளது. தான் ஓரம் கட்டப்பட்டதற்கு அன்புமணிதான் காரணம் என எதிரொலி மணியன் அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். நடிகர் சூர்யாவிற்கு எதிரான போராட்டங்களில் அவர் பங்கு கொள்ளவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தள நேரலையில் எதிரொலி மணியன் கீழ்கண்டவாறு பேசியிருந்தார்.
1993 ஆம் ஆண்டு மாவட்ட செயலாளராக இருந்த போது போன் வசதி இல்லாத காலத்தில் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுற்றி நிர்வாகிகளை சந்திப்போம். பொறுப்பாளர்களை அழைத்து வா என அய்யா கூறுவார் இந்த தகவலை நிர்வாகிகளை தேடி கண்டு பிடித்து சொல்வதற்கு எங்களுக்கு மூன்று நாட்கள் ஆகும். மக்களோடு மக்களாக அன்றைக்கே பழக ஆரம்பித்து விட்டோம்.
2006 தேர்தலில் நான் வெற்றி பெறுவதற்கும் மூல காரணம் திமுக தான். நாம்(பா.ம.க) இல்லை என்றாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது. இரண்டு கட்சியும் இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த இயக்கம் திமுக. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட தொண்டனாக அய்யாவால்(ராமதாஸ்) வளர்க்கப்பட்டவன். பாமக ஜாதி கட்சி என முத்திரை குத்தப் பட்டாலும் எல்லா சமுதாயத்திற்கும் பணிபுரிய வேண்டும் என அய்யா சொல்லியிருக்கிறார் அதை இன்றைக்கும் கடைபிடித்து வருகிறோம்.ஆனாலும் பா.ம.கவை சாதிக் கட்சியாக சித்தரிப்பது இன்னும் மாறவில்லை.
மற்ற மாவட்டங்களில் தலித்துகளுடன் சண்டை இருந்தாலும் இந்த மாவட்டத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் தலித்துகளும் வன்னியர்களும் தோழமையாக இருப்பார்கள். ஒருவரையொருவர் வன்மமாக பார்க்கும் நிலை வரவில்லை. ஆனால் இப்போது அந்த நிலை மாறுகிறது. இப்போது இருக்கிற இளைய தலைமுறையினர் பெரியவர்கள் பேச்சை கேட்பதில்லை.அனுபவம் வாய்ந்தவர்களை அவர்களை மதிக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் வயசு அப்படி. அவர்களுக்கு அனுபவம் என்பது இல்லை. எவ்வளவு கோடி கொடுத்தாலும் அனுபவம் கிடைக்காது. அனுபவசாலிகள்¸ மூத்த தலைவர்கள்¸ மூத்த அரசியல்வாதிகள் எல்லா வலிகளையும் தாண்டி வந்தவர்கள் அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் இயக்கத்திற்கு வழிகாட்டும்.
அப்போது உழைப்பே ஆயுதமாக இருந்தது இப்போது செல்போன் ஆயுதமாக உள்ளது.செல்போனில் வார்த்தை ஜாலம் காட்டுகிறார்கள். இது எல்லாக் கட்சியிலும் உள்ளது.அதை நம்புகிற கட்சிகள் கொஞ்ச காலத்திற்கு பளீச்சென்று தெரியும். சமூக வலைத்தளங்களை நம்பி கட்சியை நடத்தினால் கட்சி வளரும் என்பது பொய்யான தகவல். கட்சியில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்கள்¸ கிராமத்துக்குச் சென்று கட்சி தொண்டர்கள் ஆதரவு சொல்லாதவர்கள் தலைமைக்கு வழிகாட்டுகிறார்கள். அய்யாவின் பழைய ஆட்களுக்கு சூது¸வாது தெரியாது. ஆனால் இதுவே தப்பாக போய் விடுகிறது.பல நேரங்களில் நானே பாதிக்கப்பட்டுள்ளேன். ஒருவருடைய குணத்தையும் பார்க்க வேண்டும்¸ குற்றத்தையும் பார்க்க வேண்டும். இதில் எது அதிகமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஆயிரம் நன்மைகளை புறந்தள்ளி விட்டு ஒரே ஒரு தப்பை சுட்டிக் காட்டி ஒதுக்கி வைப்பது மாபெரும் தப்பு. அப்படி பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பல பேர் உள்ளனர் அவமானத்தை சகிக்க முடியாமல் கட்சி மாறிப்போகும் நிலை உள்ளது.
அய்யா கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவர்.அவரை மாதிரி இன்னொரு தலைவர் இந்த சமுதாயத்திற்கு கிடைப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது அதற்கு வாய்ப்பும் கிடையாது. அய்யா மாதிரி மக்களோடு மக்களாக பயணித்தால் மட்டுமே அன்புமணியால் தலைவராக முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். அப்போதே அவர் கட்சி மாற முடிவு செய்து விட்டதாக பரவலாக பேசப்பட்டது.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ராமதாஸ்¸ துரோகிகள் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்¸ சோரம் போகிறவர்கள் இனி இந்த கட்சிக்கு தேவையில்லை¸ வீரம்¸ வெட்கம்¸ ரோஷம் மிகுந்தவர்கள்தான் இந்த கட்சிக்கு தேவை என ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் எதிரொலி மணியன் பா.ம.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இதை நம்மிடம் உறுதி படுத்திய எதிரொலி மணியன் வருகிற 27ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைய இருப்பதாகவும் அந்த சமயத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் எனவும்¸ தன்னோடு யார்?யார்? தி.மு.கவில் இணைய இருக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை என்றும் கூறினார்.
தன்னோடு தி.மு.கவுக்கு வரும்படி பா.ம.க முக்கிய நிர்வாகிகளோடு அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தெற்கு மாவட்ட பா.ம.கவினர் சிலர் கட்சிக்கு துரோகம் இழைக்க மாட்டோம் என அவருக்கு பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. காளிதாசின் நிலை என்ன என அவரிடம் கேட்ட போது பா.ம.கவிலேயே தொடர்ந்து இருப்பேன். கட்சி மாற மாட்டேன் என உறுதியுடன் தெரிவித்தார்.