திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடியில் அகஸ்தியர் கோயில் கும்பாபிஷேகம் 1763 சிவாலயங்களை பிரதிஷ்டை செய்த அன்புசெழியன் தலைமையில நடைபெற்றது.
சப்தரிஷிகளில் ஒருவரும்¸ சித்தர்களில் முதன்மையானவருமான அகஸ்திய மகரிஷி¸ காவிரி தென்கரை¸ வடகரை பகுதிகளில் பெரும் சிவாலயங்களை அமைத்தவர். பல்வேறு சிறப்புகளை பெற்ற இவருக்கு முதன்முறையாக திருவண்ணாமலை அருகே கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ளது. ரீக்¸ யசூர்¸ சாம அதர்வண வேதங்களும்¸ மகாவிஷ்ணுவாகிய கோவிந்தராஜ பெருமாளும் வழிபட்ட கோயில் இதுவாகும்.
இங்கு குருதட்சணமூர்த்திக்கு 9 அடி உயர சிலை அமைக்கப்பட்டு குரு யோகதட்சணாமூர்த்தி என்ற பெயரில் தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஈஸ்வரனை வேதங்கள் வழிப்பட்டதால் இது குருதோஷ பரிகாரதலமாக கருதப்படுகிறது. மேலும் ஆலங்குடிக்கு இணையானதாக விளங்குவதால் வட ஆலங்குடி என்று போற்றப்படுகிறது.
இந்த நிலையில் இக் கோயிலில் அகஸ்திய மகரிஷிக்காக தனி கோயில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை யொட்டி கணபதி வழிபாடு¸ புண்ணியாக வாசனம்¸ நான்காம் கால பூஜை¸ கலசங்கள் வாத்திய முழக்கங்களோடு புறப்பாடு¸ மகா தீபாரதனை ஆகியவை நடைபெற்றது. பிறகு அகஸ்திய மகரிஷி ஆலய விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் அன்புச்செழியன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
இதில் நல்லாசிரியர் தணிகை வையாபுரி¸ ஜெயராமன்¸ இந்தியராணி¸ ஆறுமுக சுவாமி¸ மண்ணு¸ காளிகாம்பிகை பூசாரி¸ உதயகுமார்¸ பாண்டியன்¸ சங்கர்¸ அன்பழகன்¸ ரவி¸ மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேதநாத ஈஸ்வரர் கோயில் |
மண்ணில் புதைந்து கிடக்கும் 12ஆயிரம் லிங்கங்கள்
சுமார் 40¸000 கோயில்கள் சோழ சாம்ராஜ்யத்தில் உருவாக்கப்பட்டன. இறைவனின் மீது மாற அன்புகொண்ட மன்னர்கள் கட்டிய கோவில்களை அழிய வைத்து வேடிக்கை பார்க்கும் தலை முறையினர் நாம்.புதிய ஆலயங்களை உருவாக்க வேண்டாம். சிதிலமுற்ற ஆலயங்களை சீரமைத்தால் போதும் என்பதும்¸ ஆலயங்களை சீரமைப்போம்¸ ஆலயங்களை காப்போம் என்பதையும் நோக்கமாக கொண்டு காஞ்சிபுரம் அகஸ்திய கிருபா எனப்படும் திருக்கோயில்கள் திருப்பணிக்குழுமம் செயல்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மண்ணில் புதைந்து கிடக்கும் 12ஆயிரம் லிங்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அகஸ்திய கிருபா ஈடுபட்டு வருகிறது. அதன் நிறுவனர் அகஸ்தியரின் சீடர் என்றழைக்கப்படும் அன்புச்செழியன் இதுவரை 1763 சிவலிங்கங்களுக்கு பிரதிஷ்டை செய்து சிதிலமடைந்த கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து அதை ஆராதனைக்குரிய கோயிலாக மாற்றியிருக்கிறார். அதன்படி பிரதிஷ்டை செய்யப்பட்டதுதான் வேடந்தவாடி வேதநாத ஈஸ்வரர் கோயிலாகும்.