Homeசெய்திகள்வேங்கிக்கால் வெள்ளத்திற்கு காரணம் அறிவியல் பூங்கா

வேங்கிக்கால் வெள்ளத்திற்கு காரணம் அறிவியல் பூங்கா

வேங்கிக்கால் வெள்ளத்திற்கு காரணம் அறிவியல் பூங்கா

வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெள்ளம் வருவதற்கு காரணம் அறிவியல் பூங்கா ஆக்கிரமித்து கட்டப்பட்டதால்தான் என அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டி உள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. நேற்று ஒரே நாள் மட்டும் 1304 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. மாவட்டத்திலேயே திருவண்ணாமலையில் அதிகப்பட்சமாக 150 மில்லி மீட்டர் மழை பெய்தது. 

இந்த மழையினால் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. குறிப்பாக வேங்கிக்கால் பகுதியில் உள்ள வேங்கிக்கால் ஏரி¸ நொச்சிமலை கிராமத்தில் உள்ள நொச்சிமலை ஏரி¸ கிழ்நாத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பி சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலை¸ அவலூர்பேட்டை நெடுஞ்சாலை¸ திண்டிவனம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஐயப்பன் நகர்¸ கிருஷ்ணா நகர்¸ குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு¸ மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகளோடு சென்று மேற்கண்ட சாலைகளில் இன்று ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது¸ 

திருவண்ணாமலை மாவட்டத்தில் எதிர்பாராத அளவு மழை பெய்துள்ளது. 2 தினங்களில் 15சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதிக அளவு மழை இதுவாகும். ஆனாலும் இந்த மழையினால் பெரும் பாதிப்புகள் எதுவும் இல்லை. மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டதால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

திருவண்ணாமலை மலையில் இருந்து வரும் தண்ணீர் ஆடையூர் ஏரிக்குச் சென்று அங்கிருந்து வேங்கிக்கால் ஏரிக்கு வருகிறது. வேங்கிக்கால் பகுதியில் முட்டிக்கால் அளவிற்கு தண்ணீர் செல்கிறது. அடுத்த மழை காலத்திற்குள் இங்கு பாலத்தை கட்ட உத்தரவிட்டு இருக்கிறேன். இதனால் ரோட்டிற்கு தண்ணீர் வர வாய்ப்பில்லை.எதிர்பாராத மழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

புயல் மரக்காணம் பகுதியை கடந்தாலே திருவண்ணாமலை மாவட்டம் பாதிப்புக்குள்ளாகும். இந்த மழையினால் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு பேரும்¸ திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவரும்¸ தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 2 பேரும் என 5 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரணங்களை முதல்வர் அறிவிப்பார். திருவண்ணாமலை மாவட்டத்தில் முப்பத்தி ஏழு முகாம்களில் ஆயிரத்து 166 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அறிவியல் பூங்கா

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதில் இந்த அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை வேங்கிக்கால் பகுதியில் இந்த அளவிற்கு தண்ணீர் வர என்ன காரணம்? இங்கே கட்டப்பட்டு இருக்கிற பார்க்(அறிவியல் பூங்கா) தண்ணீர் போகிற வழியே மடக்கி கட்டப்பட்டுள்ளது. இந்த பார்க்கை கட்டியது அன்றைய மாவட்ட ஆட்சியர்¸ உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இரண்டு பேர். இந்த பார்க் மட்டும் இங்கு இல்லை என்றால் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லை. 

நீர் போகும் வழி அந்த பார்க் வழியாகத்தான் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்மாய் வழியாக தண்ணீர் போகாத மாதிரி மண்ணை மேடாக தூக்கி பார்க்கை கட்டியுள்ளனர். இதனால்தான் தண்ணீர் ரோட்டில் வருகிறது. இப்படித்தான் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவரே ஆக்கிரமித்தன் விளைவுதான் இது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லி இருக்கிறோம். மேலும் நீர் போக்கு வழிகளை நானும் மாவட்ட ஆட்சித் தலைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.ஆடையூரிலிருந்து வெங்காய வேலூருக்கு நீர் வழிப் பாதையை அமைத்து விட்டால் இங்கு தண்ணீர் வராது. ஏரிகளில் தண்ணீர் வடிந்த பிறகு இந்த பணி மேற்கொள்ளப்படும்.

ரிங் ரோடில் மழை வெள்ளத்தில் இரண்டு அடி ஆழத்தில் என்னுடைய கார் செல்லும் நிலை உண்டானது. எனவே அந்த பகுதியில் 2 பாலங்களை கட்ட சொல்லியிருக்கிறேன். ஊராட்சி மற்றும் ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலை சாலை அளவிற்கு தரமானதாக இருக்காது. இதற்காகத்தான் ஐந்தாண்டுகளில் 10¸000 கிலோ மீட்டர் ஊராட்சி மற்றும் ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைகள் துறை மூலம் தரம் உயர்த்த முதல்வர் ஆணையிட்டிருக்கிறார் அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் கலெக்டர் பரிந்துரையின் பேரில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் ஊராட்சி மற்றும் ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது தி.முக. நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன்¸ திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி¸ வேங்கிக்கால் பரத்¸ மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

இந்த அறிவியல் பூங்கா¸ ரூ.3 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டதாகும். இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பூஙகா அமைய காரணமாக இருந்த அப்போதைய கலெக்டர் கந்தசாமி இப்போது தி.மு.க ஆட்சியில் ஆவின் மேலாண்மை இயக்குநர் என்ற மதிப்புமிக்க பதவியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

See also  பி.எஸ்.என்.எல்.அதிகாரி வீட்டில் 40பவுன் நகை கொள்ளை

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!