கார்கில் போர் வெற்றி விழாவில் பாரத மாதா சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது முன்னாள்-இன்னாள் ராணுவ வீரர்கள் பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட்டனர்.
கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் கார்கில் 1999ம் ஆண்டு மே முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்ற போரில் பாகிஸ்தான் படைகள் பின் வாங்கின. இந்தியா கார்கிலை மீண்டும் கைப்பற்றி வெற்றி கொடியை நாட்டியது. கார்கிலில் நடந்த ஆபரேஷன் விஜய் வெற்றி பெற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். இந்த போரில் இந்திய வீரர்கள் 500க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 1300க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்தனர்.
பாகிஸ்தானை வீழ்த்திய கார்கில் போர் வெற்றியை நினைவு கூறும் வகையிலும், பங்கேற்ற வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் ஜூலை 26ந் தேதி வெற்றி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் போர் 23ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை பேகோபுரம் தெருவில் உள்ள யாதவர் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் ஒருங்கிணைந்து கார்கில் போர் வெற்றி விழாவை இன்று கொண்டாடினர். பாரத மாதா படத்திற்கு பூ தூவி தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது மண்டபத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான முன்னாள்-இன்னாள் ராணுவ வீரர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என முழக்கமிட்டனர். போரில் வீரமரணமடைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்விழாவுக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நீதிபதி (ஓய்வு) கிருபாநிதி, பிரிக்.ரவி முனுசாமி, கர்னல் சி.டி.அரசு, ரசிகேசவன் சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கார்கில் போரின் வெற்றியை கொண்டாடும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கு.கண்ணகி, அப்துல்கலாம் நல அறக்கட்டளை ஆர்.நடராஜன், சங்க மாவட்ட துணைத் தலைவர் எல்.அந்துராஜ், சிஎஸ்டி மேலாளர் சுப்பிரமணி, ஆலோசகர்கள் எம்.தில்லன், பி.கண்ணன், என்.கே.பென்ஜமின், குமார், வேலு, ஆறுமுகம் மற்றும் திருவண்ணாமலை, கண்ணமங்கலம், போளுர்,செய்யாறு, கீழ்பென்னாத்தூர், செங்கம், வேட்டவலம், கலசபாக்கம், படவேடு, வந்தவாசி, கேளுர், களம்பூர், தேவிகாபுரம், ஜமீன்கூடலூர், ஆரணி ஆகிய பகுதிகளில் இருந்து முன்னாள்-இன்னாள் ராணுவ வீரர்கள், அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
விழாவில் கார்கில் போரில் ஊனமுற்ற வீரமரணமடைந்த முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சகாதேவன் நன்றி கூறினார்.
முன்னதாக கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருவண்ணாமலை அடுத்த எரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ப.கிருஷ்ணனின் சிலைக்கு, நிர்வாகிகள்,பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.