Homeசெய்திகள்திருவண்ணாமலை:வீடுகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது

திருவண்ணாமலை:வீடுகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது

திருவண்ணாமலை:வீடுகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் ரோடுகளில் ஓடி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

நீர்வரத்து கால்வாய்கள் காணாமல் போனதால் வெளியேறும் நீர் நிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் வெள்ள நீர் சூழாமல் பெரும்பாலான குடியிருப்புகள் தப்பின.

கடந்த மாதமும் ஏரிகள் நிரம்பி ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். இந்நிலையில் மீண்டும் ஏரிகள் நிரம்பி ரோடுகளில் வெள்ளம் ஓடுவதாலும்¸ குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்திருப்பதாலும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

சென்றமுறை பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் எ.வ.வேலு¸ மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ஏரிகளில் நிரம்பி வழியும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழாத வகையில் கால்வாய்களை அகலப்படுத்தும் படி உத்தரவிட்டு சென்றனர். அடுத்த முறை இந்த மாதிரியான நிலை இருக்காது என்றும் ஏரிகள் நிரம்பி வழியும் நீர் கடைசியாக துரிஞ்சல் ஆற்றுக்கு சென்று சேரும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

திருவண்ணாமலை:வீடுகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது

ஆனால் இப்பணிகளை முழுவதும் முடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். அரசியல் தலையீடு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் இருப்பதாகவும்¸ இதனால் தண்ணீர் செல்வதற்கு தேவையான கால்வாய்கள் அமைக்க முடியாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. வேங்கிக்காலில் ஏரி நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் நிரம்பி வழிந்ததால் அதன் ஒரு பகுதியை யாரோ உடைத்துள்ளனர். இதனால் கால்வாயிலிருந்து தண்ணீர் வெளியேறி குறிஞ்சி நகரை சூழ்ந்துள்ளது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வர முடியாமல் தவித்தனர்.

See also  திருவண்ணாமலை பிரபல பைனான்ஸ் கம்பெனியில் தீ விபத்து

கால்வாய்கள் இல்லாத காரணத்தினால் ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர் நிலங்களின் மீது பாய்ந்தோடும் வகையில் அதிகாரிகள் வழிவகை செய்துள்ளனர். இதனால் நிலங்கள் எல்லாம் தண்ணீராக காட்சியளித்து வருகிறது. நிலங்கள் மட்டும் இல்லாமல் இருந்தால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தைரியமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்து கால்வாய்களை அமைக்காத வரை ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இதே நிலைமைதான் இருக்கும் எனவும்¸ இதற்கு நிரந்தர தீர்வு இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும்  சிலர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஏரி நீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர்  முருகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாய்களை அகலப்படுத்தி சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றிட உத்தரவிட்டார்.  அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல்,கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி கலெக்டர் வெற்றிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!