திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை¸ வெள்ள மீட்பு பணிக்கு 370 போலீசார் தயார் நிலையில் இருப்பதாக எஸ்.பி.பவன்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் உதவிக்காக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று(10-11-2021) முதல் இன்று காலை வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 326 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆரணியில் 25.70¸ செய்யாறில் 54.50¸ செங்கத்தில் 12.40¸ ஜமுனாமரத்தூரில் 18.80¸ வந்தவாசியில் 52.30¸ போளுரில் 15.70¸ திருவண்ணாமலையில் 14¸ தண்டராம்பட்டில் 19¸ கலசப்பாக்கத்தில் 11¸ சேத்துப்பட்டில் 28.20¸ கீழ்பென்னாத்தூரில் 22.20¸ வெம்பாக்கத்தில் 52.20 என மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.
செய்யாறு¸ வந்தவாசி¸ வெம்பாக்கம் பகுதிகளில் கன மழை பெய்ததால் மரங்கள் ரோட்டின் குறுக்கே விழுந்தன. வந்தவாசியை அடுத்த புன்னையிலிருந்து ஓசூர் செல்லும் சாலையின் குறுக்கே புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்தம் வந்தவாசி டி.எஸ்.பி. வி.விஸ்வேஸ்வரய்யா¸ கீழ்கொடுங்காலூர் இன்ஸ்பெக்டர் பி.புகழ்¸ மாவட்ட பேரிடர் மீட்பு குழு போலீசார் நெடுஞ்சாலை துறையினர் உதவியுடன் விரைந்து சென்று மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தெள்ளார் அடுத்த கொடியாலம் கிராமத்தில் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரங்களை தெள்ளார் இன்ஸ்பெக்டர் ஆர்.சோனியா மற்றும் மாவட்ட பேரிடர் மீட்புக் குழு போலீசார் விரைந்து சென்று அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அ.பவன்குமார் பாராட்டு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலும்¸ உட்கோட்ட அளவிலும் 80 பேரிடர் மேலாண்மை பயிற்சி முடிந்த காவலர்கள் அடங்கிய 370 காவலர்கள் மழை வெள்ள மீட்பு பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் புகார் மற்றும் உதவிக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை எண்:1077 அல்லது மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண்:04175-233266 அல்லது ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் தெரிவித்துள்ளார்.