பந்தக்கால் நடப்பட்டது. தீப விழா பூர்வாங்க பணிகள் துவக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகள் துவக்கமாக இன்று பந்தக்கால் நடப்பட்டது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமமைலயார் கோயிலில் நடைபெறும் விழாக்கள் தனிச் சிறப்புடையனவாகும். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். மகாதீபத்தன்று பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து ஞானப்பெருமலையாய் நிற்கும் அண்ணாமலைப்பிரானை வலம் செய்து மாலையில் மலைச்சிகரத்தில் தோன்றும் பேரானந்தப் பெருஞ்சோதியைத் தரிசித்து பேரின்பப் பெருங்கடலில் மூழ்குவர்.
இந்த வருடம் சிறப்பு மிக்க கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழாவை தொடர்ந்து டிசம்பர் மாதம் 6ந் தேதி 2668 அடி உயர மலையின் உச்சயில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகள் துவக்கமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று பந்தக்கால் நடப்பட்டது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு¸ அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து¸ தங்க கொடி மரத்தின் அருகே உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து பந்தக்காலுக்கு பால்¸ தயிர்¸ சந்தனம்¸ மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. விநாயகர்¸ முருகர்¸ அண்ணாமலையார்¸ அம்மன்¸ சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களின் முன்பு பந்தக்கால் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 6-25 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. அப்போது லேசாக சாரல் மழை பெய்தது.
பந்தக்காலுக்கு சிவாச்சாரியார்கள் தீபாராதனை காட்டினர். அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டு வணங்கினர். கோயில் இணை ஆணையாளர் அசோக்குமார். துணை ஆணையாளர் ராஜேந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர்புற கூட்டுறவு வங்கித் தலைவர் டிஸ்கோ குணசேகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
பந்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பத்திரிகை அச்சடித்தல் பணி¸ பஞ்ச மூர்த்திகள் உலா வரும் வாகனங்கள் மற்றும் சப்பரங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள்¸ வண்ணங்கள் பூசும் பணிகள், தேர் பழுது பார்த்தல் ஆகியவை இன்று முதல் தொடங்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறாமல் இருந்த மாடவீதியில் சாமி ஊர்வலங்கள், தேரோட்டம் ஆகியவை இந்த வருடம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.