திருவண்ணாமலையில் தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி எல்லை தெய்வ வழிபாடு துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த வருட கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக தீபத்திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்காக எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். 3 நாட்கள் நடைபெறும் இந்த வழிபாட்டில் முதல் நாள் துர்க்கையம்மன் உற்சவமும்¸ 2வது நாள் பிடாரி அம்மன் உற்சவமும்¸ 3வது நாள் விநாயகர் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று(7-11-2021) துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. அபிஷேக பொடி¸ தயிர்¸ பால்¸ சந்தனம்¸ பஞ்சாமிர்தம்¸ சந்தனம்¸ விபூதி இவைகளை கொண்டு துர்க்கையம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பிறகு தீபாராதனை காட்டப்பட்டது.
இரவு நடைபெற்ற உற்சவ நிகழ்ச்சியில் துர்க்கையம்மன் விசேஷ அலங்காரத்தில் காட்சியளித்தார். பிறகு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு கோயில் பிரகாரத்திலேயே சாமி உலா நடைபெற்றது.
நாளை அண்ணாமலையார் கோயிலில் பிடாரி அம்மன் உற்சவமும்¸ நாளை மறுநாள் விநாயகர் உற்சவமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 10ந் தேதி காலை 6 மணியிலிருந்து 7-30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். 10ம் நாள் திருவிழாவாக 19ந் தேதி மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் கோயிலின் 5ம் பிரகாரத்தில் விநாயகர்¸ சந்திரசேகரர்¸ பஞ்சமூர்த்திகள் உலா நடக்கிறது.
கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதம் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10.11.2021 புதன்கிழமை விடியற்காலை 6 மணி முதல் 9 மணி வரை கொடியேற்றம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது 9 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்¸ 16.11.2021 செவ்வாய்கிழமை பஞ்சமூர்த்திகள் உற்சவம் தேரோட்டம் திருவிழா இந்த ஆண்டு கோவில் பிரகாரத்தில் உள்ளே நடைபெற உள்ளதால்¸ பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் மலை மேல் ஏறுவதற்கு பக்தர்கள்¸ பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.
தீபத்திருநாள் மற்றும் பௌர்ணமி நாட்களான 17.11.2021 பிற்பகல் 1 மணி முதல் 20.11.2021 வரை கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதே போல் 17ந் தேதியிலிருந்து 20ந் தேதி வரை கிரிவலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.