தொடரும் கோயில் நகை கொள்ளை-கிராம மக்கள் சோகம்
திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தில் கோயில் நகைகளோடு சேர்த்து சிசிடிவி பதிவுகளையும் தூக்கி சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் சுபிட்சமாக நோய் நொடியின்றி வாழ திருவண்ணாமலை அருகே உள்ள செ.அகரம் கிராமத்தில் 12 கோயில்களுக்கு மேல் அந்த கிராமத்தில் வாழ்ந்த மூதாதையர்கள் கட்டியுள்ளனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது போல் கிராம மக்கள் இந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீபூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோயிலிலும், சந்தியம்மன் கோயிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நேர்த்திக் கடனை செலுத்தும் நிகழ்வும் செ.அகரம் கிராமத்தில் 3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்.
இப்படி சிறப்பு பெற்ற செ.அகரம் கிராமத்தில் கோயில் நகைகள் அடிக்கடி திருடு போவது அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன் ஆகிய கோயில்களில் உண்டியல்கள் திருடு போயின. சந்தியம்மன் கோயிலில் சாமி நகைகள் கொள்ளை போயின. இதுபற்றி போலீசில் அளிக்கப்பட்டது. ஆனால் யாரும் பிடிபடவில்லை.
கொள்ளையர்கள் தொல்லையால் சாமி கிரகத்தின் மேல் சாத்தப்படும் 3 வெள்ளி குடைகளை பாதுகாப்பாக வைப்பது என கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த ஊரில் சிசிடிவி கேமரா உள்ள வீடான மேஸ்திரி தேவராஜ் (வயது 65) என்பவரது வீட்டில் அந்த குடைகளை பாதுகாப்பாக வைத்தனர். மேஸ்திரி வேலைக்காக தேவராஜ் தனது மனைவியுடன் அடிக்கடி பெங்களுருக்கு சென்று விடுவார். அவரது மகன்களும் பெங்களுருவில் இருப்பதால் வீடு பூட்டப்பட்டிருக்கும்.
வீடு பங்களா டைப்பில் இருப்பதாலும், சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டிருப்பதாலும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் என நினைத்து கொள்ளையர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தனர். வீட்டு கதவையும், 2 பீரோக்களையும் உடைத்துள்ளனர். பீரோவுக்குள் நகை-பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் கோயிலுக்கு சொந்தமான 3 வெள்ளி குடைகள் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். போகும் போது தாங்கள் போலீசிடம் சிக்கி விடக்கூடாது என சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். பைகளில் இருந்த தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வயல் வெளியில் வீசி விட்டு சென்று விட்டனர். திருடு போன வெள்ளி குடைகளின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் தேவராஜ் தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தண்டராம்பட்டு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிசிடிவி கேமரா பாதுகாப்பில் வைக்கப்பட்ட கோயில் நகைகளும் திருடு போய் விட்டதே என கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். கொள்ளையர்களை விரைவில் பிடித்து கோயில் சொத்து கொள்ளை போவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.