Homeஅரசு அறிவிப்புகள்விடுதி மாணவர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப கலெக்டர் உத்தரவு

விடுதி மாணவர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப கலெக்டர் உத்தரவு

விடுதி மாணவர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற விடுதிகளில் தங்கியுள்ள மாணவ-மாணவியர்களை பள்ளி நிர்வாகம் உடனே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவியின் மர்ம மரணத்தால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை அடுத்து அந்த பள்ளியில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தியது. இதில் அந்த பள்ளி விடுதி அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் அனுமதியற்று செல்பட்டு வரும் தனியார் பள்ளி விடுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.   

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தங்குமிடத்துடன் கூடிய அரசு, தனியார் பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, 

நமது மாவட்டத்தில்  மாணவர்கள் தங்கும் அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள், உண்டு உறைவிட பள்ளி விடுதிகள் 41, அரசு நிதியுதவி பெறும் பள்ளி விடுதிகள் 18, தனியார் பள்ளி  விடுதிகள் 12 என மொத்தம் 71 பள்ளி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் சாதாரண கதவுகள்தான் அமைக்க வேண்டும். இழுவை கதவுகள், உருளைக்கதவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மாடிப்பகுதியில் பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் போதிய உயரத்திற்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆபத்தான கட்டடங்கள் அல்லது கட்டடப்பகுதிகள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

ஒவ்வொரு பள்ளிகளிலும் சமையலறை, பள்ளிக் கட்டடத்தை விட்டு தனியாக கான்கீரிட் கூறையுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கூறை வேயப்பட்ட பகுதிகளில் பள்ளிகளின் சமயலறைகள் இருக்க கூடாது. பள்ளி விடுதிகளில் தீயணைக்கும் கருவிகளை அவசர உபயோகத்திற்கு உதவும் வகையில் பொருத்தமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் மணல் நிரப்பப்பட்ட வாளிகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், எரிவாயு உருளை அவ்வப்போது வாயு கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் எக்காரணத்தை கொண்டும் மாணவிகளை சமையலறை, விறகு கொண்டு சமைக்கும் இடம் எரிவாயு சிலிண்டர், தீ காணப்படும் இடத்தின் அருகில் அனுமதிக்கக் கூடாது. 

விடுதி மாணவர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப கலெக்டர் உத்தரவு

பள்ளிகளில் உள்ள மின்சார சாதனங்களை அவ்வப்போது பழுது நீக்கி அவற்றின் பாதுகாப்பினை உறுதி செய்திருக்க வேண்டும். அதே போல் உயர் மின் அழுத்தக்கம்பிகள் விடுதியின் அருகில் அமைந்திருக்கக் கூடாது. சிதிலமடைந்த கட்டடங்கள், சுவர்கள், துண்டித்த நிலையில் உள்ள மின்சார ஒயர்கள் இருப்பின் அவைகளை உடனடியாக நீக்கம் செய்யப்படவேண்டும். மேலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தரப்படவேண்டும், அதேபோல் குடிநீர் சேமித்து வைத்திருக்கும் நீர்த்தேக்க தொட்டிகளை தூய்மையான முறையிலும் பாதுகாப்பான முறையிலும், தண்ணீர் குழாய்கள் அனைத்தும் கசிவின்றி வைத்திருக்க வேண்டும்.

அடிப்படை தேவைகளான 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை மற்றும் 1 மலக்கழிப்பறை என்ற அளவில், போதிய இடைவெளியில் காற்றோட்டம், போதிய வெளிச்சத்துடனும், பாதுகாப்புடனும் அமைந்திருத்தல், மாணவர்கள் கூடும் இடங்களில் துறுப்பிடித்த ஆணிகள், கூர்மையான பொருட்கள், கம்பிகள், உடைந்த நிலையில் உள்ள பொருட்கள் அகற்றப்படவேண்டும். விளையாட்டு வகுப்புகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு உபகரணங்கள் சரியான நிலையில் உறுதியாக உள்ளதா என்பதை அறிந்தே மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும்; அதே போல் உணவு வேளைகளில் மாணவ, மாணவியர்கள்  ஆரோக்கியமான முறையில் அமர்ந்து உணவு அருந்த போதுமான இடவசதிகளை தூய்மையான முறையில் பராமரித்து வருகின்றதா என்பதை  ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் மனநல பாதிப்பு, மனசோர்வு, படிப்பில் ஆர்வமின்மை ஆகியவைகளை கண்டறிந்து அவ்வாறு இருப்பின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உளவியலாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் மனச்சோர்வை போக்குவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

ஏதாவது பிரச்சனை என்றால் 1098 ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொள்ள வேண்டும். பள்ளிகளில் முதலாவதாக ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.அடுத்து பெற்றோர்களுக்கும், அதைத் தொடர்ந்து மாணவ- மாணவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்தாலே 80 சதவீத பிரச்சனைகள் தீர்ந்து விடும். மாணவர்கள் சோர்வாக இருப்பதை கண்டறிந்தால் அவர்களுடன் பேசி அந்த சோர்வை போக்க வேண்டும். பள்ளிகள் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதை முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவர்களின் படிப்புக்காக இரண்டு மாதம், மூன்று மாதம் விடுதிகளை நடத்துவது என்பது இருக்கக் கூடாது. ஹாஸ்டல் நடத்துவது என்பது பள்ளிகளின் விருப்பம் அல்ல. ஹாஸ்டல் நடத்த அரசு அனுமதி வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இன்றி விடுதிகள் நடத்தப்படுவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பேசியதாவது,

மாணவ- மாணவர்களின் தற்கொலையை அரசு சீரியசாக பார்த்து வருகிறது. கள்ளக்குறிச்சி, திருவள்ளுர் பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டது. பொதுவாக தற்கொலையை 174 சட்டப்பிரிவு சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்வோம் . இதனால் குழந்தைகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கருதி விடுவர். 

விடுதி மாணவர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப கலெக்டர் உத்தரவு

மாணவ-மாணவியர்கள் தற்கொலை என்பது நமது மாவட்டத்தில் நடந்து விடக்கூடாது. ஒரு தவறு நடந்து விட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடும். இதை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பள்ளிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். நாங்களும் பள்ளிக்கு 100 மீட்டர் சுற்றளவு உள்ள கடைகளில் சோதனை நடத்தி வருகிறோம். 

பாடம் சொல்லித் தருவது மட்டும் ஆசிரியர்கள் பணியாக நினைத்து விடக்கூடாது. மாணவ-  மாணவர்களுக்கு உணர்வு ரீதியாக ஏதாவது பிரச்சனை உள்ளதா? என்பதையும் கண்டறிய வேண்டும். அதேபோல் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், விடுதிக்காப்பாளர், பாதுகாவலர் என யார் மீதாவது ஏற்கனவே புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தால் அதை மீண்டும் விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்கி விட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு தனியார் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது அப்போது திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 4 பள்ளிகள் அனுமதி இன்றி விடுதியை நடத்தி வருவது தெரியவந்தது. அந்தப் பள்ளிகள் அனுமதி பெற்று தான் விடுதியை நடத்த வேண்டும் என்று கண்டித்த மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், உடனடியாக விடுதியில் உள்ள மாணவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். இதேபோல் அனுமதியின்றி விடுதிகளை நடத்தி வந்த மற்ற பள்ளிகளுக்கும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொ) குமரன், மாவட்ட சமூக நல அலுவலர் பூ.மீனாம்பிகை மற்றும்  துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாணவ-மாணவியர்களுக்கென விடுதி நடத்தி வரும் பள்ளி நிர்வாகங்கள், தமிழ்நாடு விடுதிகள் மற்றும் காப்பகங்கள்- பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்டம் 2014 படி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு விடுதிகளை தவிர்த்து 21 காப்பகங்கள், 12 விடுதிகளுடன் கூடிய தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4 நிர்வாகம் மட்டுமே பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

See also  திருவண்ணாமலை: ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!