தரிசனத்திற்கு பக்தர்கள் தவிப்பு- கோயிலுக்கு சென்று கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை கோயிலில் நேற்று அலைமோதிய கூட்டத்தால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர். இதையடுத்து கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு தரிசனத்தை விரைவுபடுத்தினார்.
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோவிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் திருத்தலாகவும் அமைந்துள்ளது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு மலையையே சிவனாக வழிபட்டு பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.06 முதல் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.09 மணி வரை உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர். குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கிரிவல பாதையான 14 கிலோ மீட்டரும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. அண்ணாமலையார் கோயிலிலும் சாமியை தரிசனம் செய்ய கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
இதனால் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேவும் வெயிலிலும். மழையிலும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்றிருந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற எந்த வித வசதிகளும் செய்து தரப்படவில்லை. இது பற்றி செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. குடை பிடித்து கொண்டும், சில இடங்களில் நனைந்து கொண்டும் ஆய்வு செய்த அவர்கள் பக்தர்கள் ஒழுங்கான வரிசையில் நிற்க வைக்கப்படாமல் இருப்பதை கண்டறிந்தனர். ரூ.50 கட்டண வரிசையில், இலவச தரிசனத்திற்கான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதையெல்லாம் ஒழுங்குபடுத்த சொல்லி கோயில் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
குறுக்கு வழியில் வர முயன்ற பக்தர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
கருவறை முன்பு கூட்ட நெரிசலை சரி செய்து பக்தர்கள் விரைந்து சாமி தாசினம் செய்திட கலெக்டர் ஏற்பாடு செய்தார்.
கலெக்டர் ஆய்வின் போது வரிசையில் நின்றிருந்த ஆந்திர மாநில பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் சாமியை தரிசிக்க முடியாமல் உள்ளோம் என்றும், எந்த வித வசதியும் தங்களுக்கு செய்து தரப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோயில் இணை ஆணையரை போனில் தொடர்பு கொண்ட கலெக்டர், பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்யவதற்காவும், அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காகவும் நடவடிக்கைகளை எடுத்திட வருகிற புதன் அல்லது வியாழக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலையில் இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களில் பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோயிலில் சென்று ஆய்வு செய்தவர் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கலெக்டரின் ஏற்பாட்டால் பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இதையடுத்து திருவண்ணாமலை பஜாரில் நடந்து சென்று பார்வையிட்ட கலெக்டர் முருகேஷ், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகாரர்களிடம் கடையை உள்ளே தள்ளி வைக்க அறிவுறுத்தினார். பிறகு சைக்கிளில் மலையை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டார்.