திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி கரையை உடைத்து அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி கோடி போனது.
திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள சமுத்திரம்¸ ஆடையூர்¸ வேங்கிக்கால்¸ சேரியந்தல்¸ நொச்சிமலை¸ கொம்பன்¸ கீழ்நாத்தூர் ஏரிகள் நிரம்பி கோடி போனது. நீர் வரத்து கால்வாய் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் ஏரிகளில் நிரம்பி வழிந்த தண்ணீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளை சூழ்ந்தது. 2நாட்களாகியும் வெளியேற பாதை தென்படாததால் தண்ணீர் ரோடுகளில் பயணம் செய்தது. இதன் காரணமாக வேங்கிக்காலில் சுமார் 10 நகர்களும்¸ அவலூர் பேட்டை¸ திண்டிவனம் ரோடுகளில் சுமார் 7 நகர்களும் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்பட்டது. தண்ணீரை சேமித்து வைக்கும் நிலை இல்லாததால் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வீணானது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கவுத்திமலை வேடியப்பன் மலையிலிருந்து வரும் தண்ணீர் ஆடையூர் ஏரிக்கு சென்று அங்கிருந்து வேங்கிக்கால் ஏரிக்கு வருகிறது. அதே போல் திருவண்ணாமலை மலையிலிருந்து வரும் தண்ணீரும் இந்த ஏரிக்கு செல்கிறது. வேங்கிக்கால் பகுதியில் வசிக்கும் 3ஆயிரம் குடும்பங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது.
தொடர் மழையினால் வேங்கிக்கால் ஏரி தனது முழு கொள்ளளவை 2வது ஆண்டாக எட்டியது. ஏரி நிறைந்து ஏரி நீர் மதகு வழியாக தண்ணீர் அருவி போல் பாய்ந்தோடி வந்தது. ஏராளமானோர் தூண்டில் மூலம் மீன் பிடித்தனர். கோடி போன தண்ணீரில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பெண்களும்¸ ஆண்களும் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டனர். நேற்றும்¸ இன்றும் மழை இல்லாததால் தண்ணீர் வெளியேறும் வேகம் குறைந்தது. இதன் காரணமாக ரோடுகளில் தண்ணீர் ஓடாமல் உள்ளது. வீடுகளை சூழ்ந்தும்¸ பிளாட்டுகளில் தேங்கியும் இருக்கிற தண்ணீர் சிறிது சிறிதாக வற்றி வருகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் துவங்கியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் மழை பெய்யும் சூழல் உள்ளதால் ஏரிகள் நிரம்பி தண்ணீர் ரோடுகளில் வழிந்தோடும் நிலையை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்று காலை வேங்கிக்கால் ஏரி கோடி தடுப்பு சுவற்றை கடப்பாறையை கொண்டு ஆழமாக உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். 100 சதவீதம் கொள்ளளவை 80 சதவீதமாக குறைக்கும் பொருட்டு கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கரை உடைக்கப்படுவதை பார்த்த சிலர் அதிகாரிகளுடன் ஏன் கரையை உடைக்கிறீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் மழை வந்தால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கவே கரை உடைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதே போல் மற்ற ஏரிகளின் கொள்ளவையும் 80 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.